பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

51

பொன்மணி, தமிழரசியிடம் ஏதோ சொல்லப் போனாள். இதற்குள், தற்செயலாக அங்கே வந்த தாமோதரன் அண்ணன் முத்துலிங்கம் என்னம்மா ரகசியம்... எனக்கும் சொல்லப்படாதா?’ என்று சிரித்தபடியே கேட்டார். சிறிதுநேரம், தமிழரசியிடம் எதை எதையெல்லாமோ விசாரித்தபடி நின்றார். இதற்குள் வெளியே நின்ற பெண்கள்கூட்டம் உள்ளே வந்து விட்டது. பொன்மணியால், தமிழரசியிடம் தன் விவகாரத்தை முறையிட முடியாமலே போயிற்று.

இரவில், தமிழரசி, தாமோதரனைப் பற்றிய போதை நினைப்போடும், இடையிடையே பொன்மணிக்கு இன்னும் எடுத்துச் சொல்ல வேண்டிய போதனை நினைப்புடனும் தூக்கத்தைத் தூங்க வைத்து விட்டு, தனியே புரண்டாள். மறுநாள் காலையிலேயே, அத்தை வீடு, அக்கா வீடு, மாமா வீடு என்று பல வீடுகளுக்கு, அழைப்பின் பேரில் சென்று விட்டாள். மத்தியானம் வீட்டிற்குத் திரும்பிய போது, பொன்மணி அவளுக்காக வெகுநேரம் காத்திருந்ததாக கலாவதி சொன்னாள். எப்படியோ, பொன் மணியை அப்புறம் அவளால் பார்க்க முடியவில்லை.

மாலையில், கிணற்று மேட்டில் தாமோதரன் முன்னதாகப் போய் காத்திருந்தான். கமலைக் கல்லில் உட்கார்ந் திருந்தவன், வேகமாக வந்து கொண்டிருந்த தமிழரசிக்காக, கைக்குட்டையை எடுத்து, அருகே கல் பகுதியைத் துடைத்தான். அந்தச் சமயத்தில் அங்கு வந்துவிட்ட தமிழரசி, எதிர்க்கல்லில் உட்கார்ந்து, அவனைப் பார்த்து "நல்லாத்தான் திட்டம் போடுறீங்க’’ என்று சொல்லி, தலையை ஆட்டினாள். பிறகு "நேற்று ஒங்க சித்தப்பா மகன் மூலம் எப்டில்லாம் கூத்து அடிச்சிட்டிங்க. குரங்கு... குட்டிக் குரங்கு... கைய வச்சு சூடுபார்க்குமாமே அது மாதிரி"’ என்றாள்.

.