பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

55

போல், தாமோதரன் கையைப் பிடித்துக் கொண்டாள். அதே சமயம் ஏதோ ஒரு விபரீதம் விபத்தாக வரப் போவதையும் புரிந்து கொண்டாள்.

6

மிழரசியால், தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை. சித்தப்பா மகன் வினைதீர்த்தானை, தன் சொந்த அண்ணன் ராஜதுரையைவிட ஒருபடி அதிகமாகவே நினைத்திருந்தாள். சி ன் ன வயதிலிருந்தே இரட்டைக் குழந்தைகள் போல் பழகியவர்கள். அப்படிப் பட்டவன், தன்னிடம் ஒரு வார்த்தை கூடச் சொல்லாமல், வாழ்க்கையைப் பற்றி இன்னும் முழுமையாகத் தெரியாத ஒரு அப்பாவிப் பெண்ணைக் கூட்டிக்கொண்டு ஓடிவிட்டான் என்பதை நினைக்கவே அவளுக்கு அருவருப்பாக இருந்தது. அவளுக்கும், அவன் செய்தது அசல் துரோகமாகவே தெரிந்தது. முத்துமாரிப்பாட்டி அன்று பொன்மணியை, கன்னத்தில் 'கன்னம்’ போடுபவள் என்று வர்ணித்ததும், வினை தீர்த்தான் தேங்காய் பறிக்கும் போது, பொன்மணி அவசரமாக ஓடியதன் அர்த்தமும், இப்போதுதான் அவளுக்குப் புரிந்தது. இருவரும் தேங்காயை சிதறடிப்பது போல், குடும்ப மானத்தையே சிதறடித்து விட்டார்கள்!

முத்துலிங்கமும், தாமோதரனும் முன்னல் ஜோடியாக நடக்க, தமிழரசி அவர்கள் பின்னல் நடந்தாள். மெளனம் பேயாட்சியாகியது. சிறிது நேரத்திற்குப் பிறகு, முத்துலிங்கம் "எட்டி நடப்பா. இன்னைக்கு ராத்திரிக்குள்ள அவனைப் பிடிக்காட்டால் அப்புறம் ஆள் அகப்படுறது சிரமம். மொதல்ல போலீஸ் ஸ்டேஷனுக்குப் போகலாம் அவங்க உதவியில்லாமப் பிடிக்க முடியாது பாரு" என்றார்.