பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

v

போராட்டச் சக்தியின் குறியீடாகப் படைக்கப்பட்டுள்ளாள். அப்பாத்திரத்தின் மனவளர்ச்சியையும் மாற்றத்தையும் ஆசிரியர் படிப்படியே நுணுக்கமாகக் காட்டிச் செல்கிறார். பட்டிமன்றத்து வாய்ச்சொல் வீராங்கனையாக இருந்த அவள்-மகிஷாசுரர்களை வதைக்கவல்ல பராசக்தியாக எப்படி மாறினாள் என்பதைச் சமுத்திரம் காட்டும் திறம் போற்றத்தக்கது. 'பைத்தியக்கார தர்மரு' என்று கூறப்படும் மாடக்கண்ணு கதையில் அதிகம் பேசவே இல்லை. அதிகம் பேசாத அப்பாத்திரமே கதையின் வலிவிற்கு அழுத்தம் கொடுக்கிறது. இதுவும் சமுத்திரத்தின் வெற்றியோ!

III

நாவலாசிரியர் கதையைத் தாமே 'சொல்ல'வும் வேண்டும். படிப்போர் உணருமாறு உணர்ச்சி மயமான நாடகக் 'காட்சி'களைக் காட்டவும் வேண்டும். சொல்லுதல் காட்டுதல் என்னும் இருவகை வினைத் திறப்பாடே ஊடும் பாவுமாய் மிடைந்து நாவலுக்கு இழைவமைதி ஊட்டுகின்றன. 'காட்டுதல்' என்னும் வினையில் வெற்றி பெறும் ஆசிரியர் தாமாக நின்று கதையைச் 'சொல்லும்' போது இடர்ப்படுகிறார். பாத்திரங்களாக மாறி மாறி அவரால் மிக எளிதாகப் பேசப்படுகிறது; தாமே தனி நின்று பேசும் போது திணறுகிறார். அவர் சில சொற்களுக்கு வலிந்து ஊட்டும் தொனிச் சாயலும், அர்த்த கனமும் பல இடங்களில் முட்டுக் கட்டையாய் அமைந்து கலையனுபவத்திற்குத் தடையாக நிற்கின்றன. மொழிப் பிரயோகத்தில் கவனக் குறைவாலோ அளவுக்கு அதிகமான கவனத் தாலோ-தடுமாற்றம் விளைகிறது. இது குறையே! குறையே இல்லாத கலை உலகில் ஏது?