பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56

நெருப்புத் தடயங்கள்

தமிழரசி, முத்துலிங்கத்தையே உற்றுப் பார்த்தாள். தாமோதரனைவிட வளர்த்தி. எல்லோரையும் மேலே இருந்து கீழ்நோக்கிப் பார்க்கும் கண்கள். லேசாக நீண்ட கழுத்து. நடக்கும்போது கழுகு பறப்பதைப் போல் கழுத்தை நீட்டும் தோரணை. நாற்பத்தைந்து வயதிலும், வயதை வரைப்படுத்தியது போன்ற உடம்பு.

மூவரும், தத்தம் மனவெளிக்குள் அலைமோதி, புளியந் தோப்பைக் கடந்து, எல்லையம்மன் கோவிலுக்கருகே வந்த போது, முத்துலிங்கம் அங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனது மோட்டார் பைக்கை ஸ்டார்ட் செய்யப் போனார்.

பைக்கின் பக்கவாட்டில் இருந்த லெதர் பேக்கை” திறந்தார். வெட்டரிவாள் ஒன்று கண்ணாடி மாதிரி பளபளத்தது. இதற்குள், சற்று தொலைவில், கானப் பயிர் தோட்டத்தில் நின்ற ஒருவர் "டேய் முத்து! ஒரே ஒரு நிமிஷம் வந்துட்டுப் போ. வினைதீர்த்தான் ரூட்ட நான் சொல்றேன். இன்னைக்கே பிடிச்சிடலாம்’ என்றார், உடனே, அப்படிச் சொன்னவரையே வினைதீர்த்தானாக நினைத்துப் பிடிக்கப் போகிறவர்போல், முத்துலிங்கம் ஒடினார்.

தமிழரசி தாமோதரனைப் பார்த்தாள். அவன் கண்களோ ஆகாயத்தைத் துழாவின. கைகள் மோவாயைப் பிசைந்தன. சற்று முன்புவரை, அவளே ரசித்துப் பார்த்த அதே அந்த நிலாக் கண்கள், இப்போது அக்கினிக் குழம்பாய் திரண்டு நின்றன. அவன் கோபத்தை வெளியே வார்த்தைகளாக்காமல், தன்னுள்ளேயே பாய்ச்சிக் கொண்டிருப்பது புரிந்தது. தமிழரசி, அவன் தோளைப் பிடித்துக் குலுக்கி "ஒங்களத்தான்... ஏன் இப்டி பார்க்கீங்க? ஒங்களத்தான்...ஒங்களத் தான்" என்றாள்.

அவனோ, அவளை குழந்தை போலவும், குழந்தையைப் போலவும் பார்த்தான். அவன் பார்த்த அவலப் பார்வை