பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

67

தமிழரசி திருப்பிக் கொடுத்தாள்:

"‘போறதாய் இருந்தால் நீதான் போகணுமே தவிர, அவரு போகமாட்டாரு.”

தமிழரசியை, ராஜதுரை அதிர்ச்சியோடு உற்றுப் பார்த்தான். அவள் கன்னத்தில், தன் மோதிரம் பட்டு கிழிந்த ரத்தப் பகுதியை, அவள் கையை வைத்து மறைத்துக் கொண்டிருப்பதைக் கண்டான். அவள் மீது தான் உயிரையே வைத்திருக்கும்போது, அவளோ, அந்தப் பைத்தியாரன் மீது அதிக பாசம் வைத்திருப்பதைப் பார்த்து, உள்ளூறப் பொறாமை பட்டான். பிறகு, தலையை மேலும் கீழுமாக ஆட்டியபடியே தங்கையிடம் பேசினான்.

“எப்போ நீ பங்காளி மாதிரி பேச ஆரம்பிச்சுட்டியோ, அப்பவே நீ என்ன அண்ணாய் நினைக்கலன்னு தெரிஞ்சுக் கிட்டேன். ஆனால் அதே மாதிரி, என்னால ஒன்னை பங்காளியா நினைக்க முடியல. இன்னும் என்னோட செல்வத் தங்கச்சியாய்தான் நினைக்கேன். இந்த வீட்லயோ, சொத்துலயோ எனக்கு ஒரு துரும்புகூட வேண்டாம். நீ மவராசியா இரு. நான் போறேன்.”

ராஜதுரை, மாடக்கண்ணுவையும், கலாவதியையும் அழுத்தமாகப் பார்த்துவிட்டு, அம்மாவிடம் கண்களால் விடைபெற்றபடி, தொலைதூரத்திற்குப் போகிறவன் போல், தொழுவத்தில் கட்டப்பட்ட மாடுகளையும், வீட்டின் ஒவ்வொரு மூலையையும் பிரிவு மனோபாவத்துடன் பார்த்தபடியே, வெளியே புறப்படப் போனான்.

தமிழரசி திடுக்கிட்டு நிமிர்ந்தாள். கலாவதி' நாங்க போறோம்...நீ இருண்ணா’ என்று சொல்வதற்காக, அவன் கரத்தைப் பிடித்திழுப்பதற்காக, தன் கரத்தை நீட்டப் போனாள். 'பைத்தியாரத் தர்மர்' மாடக்கண்ணு, அவளை விநோதமாகப் பார்த்தபடி, அண்ணன் மகனை வழி மறிக்கப் போனார்.