பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

74

நெருப்புத் தடயங்கள்

"இனம், இனத்தோடு; வெள்ளாடு தன்னோடு’ என்கிற பழமொழி சரியாப் போச்சுக்கா. ஒரே ஒரு வரம் மட்டும் ஒன்கிட்டே கேட்கேன். அதுவும் இஷ்டமிருந்தால் கொடு. அந்த நொறுங்குவான் - என் அண்ணன் என்கிறவன் செய்திருக்கிற காரியத்துக்கு, அவனை மாறுகை மாறுகாலு வெட்டலாம். ஆனாலும் இந்தப் பாழும் மனசு கேட்க மாட்டக்குது. முத்துலிங்கம் மச்சான் அவனை கையோட பிடிச்சுவாரதுக்கு கத்தி அரிவாளோட ஆட்களை அனுப்பி இருக்காராம். மனசு கேட்க மாட்டக்கு. ஒன்னல முடியு முன்னால் அவனைக் காப்பாற்று. அப்படியே முடியாட்டாலும், அவனை எங்க கண்ணுமுன்னால கொல்லாமல்... வேற எங்கேயாவது கொல்லச் சொல்லு. இந்த ஊர்ல அவன் அடிபட்டுச் சாகுறதைப் பார்த்துட்டு எங்களால இருக்க முடியாது. உ.ம். எட்டி நடயுமிய்யா... நம்ம வீட்டுக்குப் போவோம்..."

தமிழரசி திரும்பிப் பாராமலே நின்றாள். கலாவதி போவதைப் பார்க்கத் தைரியமோ அல்லது பேசியதை நினைத்துப் பார்க்க உறுதியோ அற்றவளாய் நின்று கொண்டிருந்தாள். எப்படியோ, அவள் திரும்பிப் பார்த்தபோது, கலாவதியும், அவள் தந்தையும் இல்லை. அம்மா, மீண்டும் எதுவும் நடக்காதது போல் வீட்டுவேலைகளைக் கவனித்துக் கொண்டிருந்தாள். அண்ணன்காரன், சக மாட்டுடன் சண்டை போட்ட ஒரு காளை மாட்டை, சாட்டைக் கம்பால் விளாசிக் கொண்டிருந்தான்.

இரவில் தமிழரசி படுக்கையில் தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தாள். பகவதி அம்மாள் மகளின் மன வோட்டத்தை அறிந்தவள்போல், அவளைச் சாப்பிடக் கூப்பிடாமல், தானே சாப்பாட்டுத் தட்டைக் கொண்டு போனாள். அவள் எவ்வளவு சொல்லியும், இவள் சாப்பிடவில்லை. வாயில் ஊட்ட வந்த அம்மாவை, வலுக்கட்டாய மாக வெளியேற வைத்தாள். கதவைத் தாழ்ப்பாள்