பக்கம்:நெருப்பு மனிதன் நெல்சன் மண்டேலா (மொழிபெயர்ப்பு).pdf/13

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மண்டேலா அதிகம் கேட்க நேர்ந்தது. அவற்றினால் தாக்கம் பெற்று, தானும் அது போலத் தனது மக்களின் சுதந்திரப் போராட்டத்துக்குத் தன்னால் இயன்றதைச் செய்ய வேண்டும் என்றும் அவர் உள்ளத்தில் ஆசை வளர்த்தார்.

உள்ளூர்ப் பள்ளியில் மண்டேலா தனது ஆரம்பக் கல்வியைப் பயின்றார். பிறகு, அருகில் உள்ள நகரத்தில் அமைந்திருந்த செகண்டரிப் பள்ளிக்கூடத்துக்கு அவர் அனுப்பி வைக்கப்பட்டார். ஓரளவு கீர்த்தி பெற்றிருந்த பள்ளி அது. மண்டேலா மெட்ரிகுலேஷன் தேர்வு முடிய அந்தப் பள்ளியில் பயின்றார்.

அதன்பிறகு, ஃபோர்ட் ஹேர் என்ற இடத்தில் உள்ள யுனிவர்சிட்டி கல்லூரியில், இளங்கலைப் பட்டப்படிப்பில் பயிற்சி பெறுவதற்காக மண்டேலா சேர்ந்தார். அங்கு பயிலும்போது மாணவர் சங்கப் பிரதிநிதியாக அவர் தேர்வு செய்யப்பட்டிருந்தார்.

ஒரு சமயம் மாணவர் மறியல் போராட்டத்தில் சேர்ந்து கொண்டதற்காக, அவர் கல்லூரியிலிருந்து விலக்கப்பட்டார். அப்புறம் மண்டேலா ஜோகன்னஸ்பர்க் நகரம் சென்று தங்கினார்.

அங்கிருந்தவாறு அஞ்சல்வழிக் கல்வி மூலம் பயின்று அவர் தனது இளங்கலைப் பட்டப் படிப்பை நிறைவு செய்தார். தொடர்ந்து எழுத்தர் பணிக்கான பயிற்சிகளை மேற்கொண்டார். ‘எல்எல்பி’ தேர்வுக்கான படிப்பில் மும்முரமாக ஈடுபட்டார்.

ஜோகன்னஸ்பர்க்கில் தங்கிக் கல்விப் பயிற்சியில் முனைந்திருந்த நாள்களிலேயே, நெல்சன் மண்டேலா தீவிரமாக அரசியலிலும் ஈடுபட்டிருந்தார். அதற்கு வசதியாக அவர் 1942 இல் ஆப்பிரிக்க தேசியக் காங்கிரசில் உறுப்பினராகி விட்டார்.

அப்போது இரண்டாவது உலக மகாயுத்தம் நிகழ்ந்து கொண்டிருந்த காலம். ஆப்பிரிக்க தேசிய காங்கிரசைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் ஒருங்கிணைந்து தங்களுக்குள் ஒரு குழு அமைத்துக் கொண்டார்கள். ஆன்டன் லெம்பிடே என்ற


14 • நெருப்பு மனிதன் நெல்சன் மண்டேலா