பக்கம்:நெருப்பு மனிதன் நெல்சன் மண்டேலா (மொழிபெயர்ப்பு).pdf/27

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

விரோதமாகத் தனது நாட்டிலிருந்து வெளியேறி, ஆப்பிரிக்காவின் இதர பகுதிகளில் பல மாத காலம் சுற்றுப்பயணம் செய்தார்.

அந்நாட்களில், கிழக்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்க நாடுகளுக்கான அகண்ட ஆப்பிரிக்க விடுதலை இயக்கத்தினர் எத்தியோப்பாவில் ஒரு மாநாடு கூட்டியிருந்தனர். அந்த மாநாட்டில் மண்டேலா உரை நிகழ்த்தினார். இதர நாடுகளின் மூத்த அரசியல் தலைவர்கள் பலரும் அவரை அன்போடும் ஆதரவோடும் வரவேற்றார்கள்.

இந்தப் பயணத்தின் போது மண்டேலா ஒரு உண்மையை உணர்ந்தார். நாட்டின் விடுதலைக்காக ஆயுதம் தாங்கிப் போராட வேண்டிய நிலைமை கட்டாயம் உருவாகும். அதற்குச் சித்தமாக இருக்கும் வகையில் நாமும் நமது போர்ப் பயிற்சிகளைத் தீவிரமாக்கிக் கொள்ள வேண்டும் என்று அவர் கருதினார். அதற்காகத் ‘தேசத்தின் ஈட்டி’ அமைப்பைச் சேர்ந்தவர்களுக்குக் கொரில்லா யுத்த முறைகளில் பயிற்சி அளிக்க வேண்டியது அவசியமாகும் என்று தீர்மானித்தார். அதற்கான ஏற்பாடுகளையும் அவர் செய்யலானார்.

மண்டேலா தென்ஆப்பிரிக்காவுக்குத் திரும்பியவுடனேயே, அரசாங்கத்தால் கைது செய்யப்பட்டார். சட்ட விரோதமாக நாட்டை விட்டு வெளியேறினார் என்பது ஒரு குற்றம். அத்துடன் சட்டத்தை எதிர்த்து மறியல் போராட்டத்தை அவர் தூண்டினார் என்பது இன்னொரு குற்றம்.

இந்தக் குற்றச்சாட்டும் வழக்கு விசாரணையும், ஆப்பிரிக்க மக்களின் உயரிய குறிக்கோள்களுக்கு எதிரான நீதி விசாரிப்பே ஆகும் என்று மண்டேலா கருதினார். எனவே தனது சார்பில் அவரே எதிர்த்து வாதாடத் தீர்மானித்தார்.

இம்மாதிரியான வழக்குத் தொடர்தல்களில், முற்றிலும் வெள்ளையரே அங்கம் வகிக்கும் நீதிமன்றத்தில் நேர்மையான நீதியை எதிர்பார்க்கமுடியாது. வெள்ளையர் சம்பந்தப்பட்ட வழக்காக இருப்பதால், வெள்ளை நீதிமன்றத்தார் பாரபட்சமற்று நடந்து கொள்ளமாட்டார்கள் என்று மண்டேலா


28 • நெருப்பு மனிதன் நெல்சன் மண்டேலா