பக்கம்:நெருப்பு மனிதன் நெல்சன் மண்டேலா (மொழிபெயர்ப்பு).pdf/39

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வார்டர்கள் சிலருக்கு ஆங்கில மொழி அறிவு போதுமான அளவு இராது.

எனவே கடிதத்தைப் படித்துப் புரிந்து கொண்டு, வெட்ட வேண்டியதை வெட்டுவதற்கு அவர்கள் அதிகமான காலம் எடுத்துக் கொண்டார்கள். சில சமயம் ஒரு கடிதத்தை சென்சார் செய்வதற்கு அவர்களுக்கு ஒரு மாத காலம் கூடத் தேவைப்பட்டது.

கைதிகள் எழுதி அனுப்பிய கடிதங்களுக்கும் இதே கதிதான் நேரிட்டது. அவையும் பெரும்பாலும் வெட்டப்பட்ட தாள்களாகவே போய்ச் சேர்ந்தன.

மண்டேலா தீவுச் சிறைக்கு வந்து மூன்று மாதங்கள் ஆகியிராத நிலையில், ஒரு நாள் அவருக்கு ஒரு அறிவிப்புக் கிடைத்தது. மறுநாள் அவரைப் பார்ப்பதற்கு ஒருவர் வருவார் என்று அதிகாரிகள் தெரிவித்தார்கள். ஆயினும் வருவது யார் எனத் தெரிவிக்க அவர்கள் மறுத்துவிட்டார்கள்.

தன்னைப் பார்க்க வருவது தன் மனைவி வின்னியாக இருக்கலாம் என்று மண்டேலா நினைத்தார். அவளாகத்தான் இருக்க வேண்டும் என விருப்பம் வளர்த்தார். அவள்தான் வருவாள் என்றே நம்பினார். அவர் மனம் அப்படித் தவித்தது.

மண்டேலா தீவுச் சிறைக்குக் கொண்டு வரப்பட்டார் எனத் தெரிந்த நாள் முதலே அவர் மனைவி வின்னி அவரை சிறையில் சந்திப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்து வந்தார். அவருக்கும் தடைகள் விதிக்கப்பட்டிந்தன. அவருடைய கணவருடன் அவர் தொடர்பு எதுவும் கொள்ளக் கூடாது எனும் தடையும் இருந்தது.

ராபன் தீவுக்கு வருவது என்பது எளிதான காரியம் அல்ல. அதிகாரிகளின் உதவி இருந்தால் கூட அந்தச் சிறைக்கு வந்து போவது மிகச்சிரமமான செயலாகவே அமையும். அப்படி வந்தாலும், சந்தித்துப் பேசுவதற்கென்று அரை மணி நேரமே. ஒதுக்கப்பட்டிருந்தது.


40 • நெருப்பு மனிதன் நெல்சன் மண்டேலா