பக்கம்:நெருப்பு மனிதன் நெல்சன் மண்டேலா (மொழிபெயர்ப்பு).pdf/45

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

உண்மையாகவே நேரமாகிவிட்டதுதான். சந்திப்பு நேரம் கண் சிமிட்டும் நொடியில் பறந்தோடிப் போகும். கைதிகள் எப்போதும் உணர்கிற உண்மை இது.

மண்டேலா சிறையிருந்த நீண்ட நெடும் காலம் முழுவதும் இந்த உணர்வை அனுபவித்தார். ‘நேரமாகிவிட்டது!’ என்று வார்டர் குரல் கொடுக்கும் ஒவ்வொரு வேளையும், அதற்குள்ளாகவா நேரமாகிவிட்டது என்ற வியப்பு உணர்வே அவருக்கு ஏற்பட்டது என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

மண்டேலாவும் வின்னியும் அவரவர் இருக்கைகளிலிருந்து அவசரமாக அகற்றப்பட்டனர். அவர்கள் இருவரும் அவசரமாகக் கையசைத்துப் பிரிவுவிடை பெற்றார்கள்.

அவர் தனது அறையை நோக்கி நடந்து போகையில், அவர்கள் நடத்திய உரையாடலை நினைத்தவாறே நடந்தார். பிறகு தொடர்ந்து ஒவ்வொரு நாளும், வாரம் தோறும், மாதக் கணக்கில் அந்தச் சந்திப்பு பற்றியும், இருவரும் பேசிக் கொண்ட விஷயங்கள் பற்றியும் நினைவு கூர்ந்தவாறு பொழுது போக்கினார். மீண்டும் அவளைச் சந்திக்க இன்னும் ஆறு மாத காலம் காத்திருக்க வேண்டுமே என்றும் எண்ணிக்கொள்வார்.

ஆனால் காலம் அவரை ஏய்த்து விட்டது. அடுத்த ஆறாவது மாதம் மண்டேலாவின் மனைவி அவரைக் கண்டு பேச வரமுடியாமல் ஆயிற்று. இரண்டு வருடங்களுக்குப் பிறகு தான் அவர்களுக்கிடையே மறு சந்திப்பு நிகழ வாய்ப்புக்கிட்டியது.


46 • நெருப்பு மனிதன் நெல்சன் மண்டேலா