பக்கம்:நெருப்பு மனிதன் நெல்சன் மண்டேலா (மொழிபெயர்ப்பு).pdf/51

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இந்த விதமாக நாம் வாழ்வோம். ஏனெனில் நாம் புதியதோர் சமுதாயத்தை உருவாக்கியிருப்போம். அந்த சமுதாயத்தில், பிறப்பினால் எல்லோரும் சமம் என்ற அங்கீகாரம் கிட்டியிருக்கும். வாழ்வு, சுதந்திரம், வளங்கள், மனித உரிமைகள், நல்ல அரசாட்சி முறைமை ஆகியன ஒவ்வொருவருக்கும் சம அளவில் கிடைக்க வழி ஏற்பட்டுவிடும்.

அத்தகைய சமூகம், மனசாட்சியின் கைதிகளாக மனிதர்கள் வசிப்பதை ஒருபோதும் அனுமதிக்காது. எந்த ஒரு மனிதனின் மானுட உரிமைகள் மீறப்படுவதற்கும் இடம் தராது.

அமைதி வழியில் மாற்றங்கள் ஏற்படுவதற்கு உதவும் பாதைகளை ஆக்கிரமிப்பாளர்கள் தடை செய்வது மீண்டும் ஒரு போதும் நிகழக்கூடாது.

தங்களது சுயநலத்துக்காக இழிவான காரியங்களில் முனைவதற்கென்றே ஆக்கிரமிப்பாளர்கள் மக்களிடமிருந்து அவர்களது சக்தியைப் பறித்து விடுவதில் கருத்தாக இருக்கிறார்கள்.

இது சம்பந்தமாக, பர்மா நாட்டை ஆட்சி புரிவோருக்கு நாம் ஒரு வேண்டுகோள் விடுக்கிறோம். நோபல் அமைதிப் பரிசினைப் பெறுவதற்காக எங்களோடு தேர்வு செய்யப்பட்டுள்ள அவுங் சான் சூ குயியை அவர்கள் விடுதலை செய்ய வேண்டும்.

அவரோடும் அவருடன் இணைந்து பர்மிய மக்களின் நலனுக்காப் பாடுபடுகிறவர்களோடும் சீரிய முறையில் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும்.

இப்படிச் செய்வதற்குத் தேவையான அதிகாரத்தைப் பெற்றிருப்பவர்கள் இதை உடனடியாகச் செய்ய வேண்டும் என்று கோருகிறோம். இதன்மூலம் சூ குயி அம்மையார் அவரது ஆற்றல்களையும் சக்தியையும் தனது நாட்டு மக்கள் மற்றும் பரந்த அளவில் மனித சமுதாயம் முழுமையினது நன்மைக்கும் பயன்படுத்துவதற்கு அனுமதிக்க வேண்டும்.


52 • நெருப்பு மனிதன் நெல்சன் மண்டேலா