பக்கம்:பசிபிக் பெருங்கடல்.pdf/37

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

8. பீஜித் தீவுகள்

இருப்பிடம்

இவை தென் பசிபிக் பெருங்கடலில் உள்ளவை; 322 பவழத்தீவுகள் அடங்கியவை. இவை எரிமலைகளால் உண்டானவை. இவற்றில் மலை சார்ந்த 100 தீவுகளில் மக்கள் வாழ்கின்றனர். இத்தீவுத்தொகு தியின் பரப்பு 7,000 சதுர மைல். இவை மைக்ரோனீசியா பிரிவைச் சார்ந்தவை. மக்கள் தொகை 3 இலட்சம்.

வரலாறு

இவை புது நாடு காணும் ஆர்வம் ஓங்கிய காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டவை. டாஸ்மன் என்பார் டச்சுக்காரர் ஆவார். இவர் 1643இல் இவற்றைக் கண்டுபிடித்தார். இவருக்குப்பின் இங்குக் கேப்டன் குக் என்னும் ஆங்கிலேயர் வரலானார்.

18-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இங்கு ஐரோப்பியர் வரத்தொடங்கினர். அவர்கள் இங்கு வந்த காலை, பீஜிய மக்கள் எதிர்ப்புக் காட்டிய வண்ணம் இருந்தனர். ஆனால் நாளடைவில் இந்த எதிர்ப்பை ஐரோப்பியர் வென்றனர்; தங்கள் கொள்கைகளையும் கருத்துக்களையும் பரப்பினர்.

ககோபாவு என்பார் பீஜியரின் சமூகத் தலைவர். இவர் அரசர் என்னும் பட்டத்தைப் பெற்றிருந்தவர். இவர் 1854 இல் கிறித்துவச் சமயத்தைத் தழுவினார்.