பக்கம்:பச்சைக்கனவு.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பச்சைக் கனவு C 15

பாக்கிச் சாறு எஞ்சியிருந்தது. அந்தச் செப்பைத் தொட்டேன். பிறகு அவள் உதட்டைத் தொட்டேன். பச்சையாய்த்தானிருக்கும் வீட்டுக் கொல்லைப் புறத்தில் வைத்தியத்திற்காக வேண்டிய விஷப்பூண்டு ஏதோ பயிரிட்டிருக்கிறது. எல்லோருக்கும் தெரிந்த விஷயம்.

விஷத்தை அப்படியே பொசுக்க முடியவில்லை. புது மணியக்காரர் ஊருக்குப் புதிசு. கொஞ்சம் பயந்த பேர்வழி, யாருக்கும் தெரியாமல் அவரே பக்கத்துாரிலிருந்து போலீஸ், டாக்டர் எல்லாம் அழைத்துக் கொண்டு வந்துவிட்டார். .ரண வைத்தியர் பிணத்தின் வயிற்றைக் கிழித்தார்.

வயிற்றில் மூன்று மாதத்து சிசு.

ஊரே பற்றி எரிந்தது. அப்பா நடுங்கிப்போனார். இதைத்தான் தெரிவிக்க முயன்றாளோ? இதுதான் அவள் தெரிவிக்க முயன்றபோது எனக்குத் தெரியவில்லையோ? ஒரு வேளை தெரியாமலிருப்பதே மேலென்று உயிரை மாய்த்துக் கொண்டாளோ? தெரிந்துதான் நான் என்ன செய்ய முடியும்? ஏற்கெனவே குருடு இத்துடன் பெரியவர் களின் ஆசி பெறாத குழந்தை பிறந்த அவமானத்தையும் சுமத்துவானேன் என்ற எண்ணமோ? இத்தனைப் பகை நடுவில் பயிரான உறவைப் பாதுகாப்பதில் சட்டென்று சலிப்பேற்பட்டு விட்டதோ? நாங்கள் பாபத்தையிழைத்து விட்டோம் என்ற பயமோ? இல்லை எங்கள் ரகசியம் எங்களிருவரோடு மட்டும்தான் இருக்கவேண்டுமென்று, அது பஹிரங்கமாகுமுன் அவள் இவ்வுலகை விட்டுப் புறப்படத் தீர்மானித்துவிட்டாளோ? இந்த உறவு உருப்படப் பிறக்கவில்லை என்று உணர்ந்தாளோ?

'அந்தக் குழந்தை என்னுடையது' என்று நான் சொல்லியிருந்தாலோ கதை முடிவில் விடுபடும் புதிர் போல், எல்லாம் வெளியாயிருக்கும். இந்த மூன்று மாதங்களும் ஊரின் பொது சொத்தாயிருக்கும். அவள் நினைவு எனக்கே சொந்தமாயிருத்தல்தான் எனக்கிஷ்டம். என் சுயநலத்தால், நான் பயங்கொள்ளியாயிருந்துவிட்டுப் போகிறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பச்சைக்கனவு.pdf/24&oldid=590681" இலிருந்து மீள்விக்கப்பட்டது