பக்கம்:பச்சைக்கனவு.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 0 லா. ச. ராமாமிருதம்

அவள் பெயருக்கு விழுந்த களங்கம் நீங்காவிட்டாலும் பரவாயில்லை, உயிருடனிருந்த சமயத்தில் எங்கள் பாரத்தைக் குறைக்க யார் என்ன செய்துவிட்டார்கள்? செத்த பிறகு அவள் தலையில் பூச்சூடாவிட்டால் பரவா யில்லை. உயிர்நிலையின் ஒரே மூச்சுப்போன்ற அம்மூன்று. மாதப் பச்சைக் கனவின் மிச்சம்- நான்தான்.

இருந்தும் ஒரோரு சமயம் என் மனம் அக் கொலை யுண்ட குழந்தைக்கு ஏங்குகிறது. அது உயிருடன் இருந்தால் எனக்கு ஆறுதலாயிருக்குமோ?

இது எவ்வளவு அசட்டுத் தனமான யோசனை? எனக்கு உடனே தெரிகிறது. அது உயிருடனிருந்தால் அவளும் உயிருடனிருக்கமாட்டாளா? ஒன்றினின்று மற்றொன்றைப் பிரித்துச் சிந்திப்பது எவ்வளவு அர்த்தமற்று இருக்கின்றது: அவள் போனால் அக்குழந்தையும் போகவேண்டியதுதான். இம்மனத்தின் நிலையை என்னென்று சொல்வது?

அவள் மனதில் முடங்கிக் கிடந்த பாசம் எழுந்த ஆவேசத்தில் தொண்டையை முண்டியது. குறிச்சியில் சாய்ந்தபடியே அவனை அப்படியே அனைத்துக் கொண்டாள்.

"நான்- நான்-' திடீரென்று மனம் குழைந்த கனிவில், அது மானவெட்கத்தை விட்டது.

"இதுக்கென்ன நமக்கு வரவருஷம் குழந்தை பிறக்காதா?’ என்றாள். அந்த யோசனை அவள் மனதில் உறுத்தும் குறைக்கு ஆறுதலளித்தது.

"ஆம், வாஸ்தவம்தான், ஆனால் பெண்ணாய் பிறக்க வேண்டும். பெண்ணுக்கு நல்ல பேர் வைக்க வேண்டும்.-' "என்ன பேர் வைப்போம்?' என்று ஆசையின் அதிசயிப்புடன் கேட்டாள்.

அவன் கண்கள் காணும் ஒளியைப் பெற்றன போல் விரிந்தன.

'பச்சை.'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பச்சைக்கனவு.pdf/25&oldid=590682" இலிருந்து மீள்விக்கப்பட்டது