இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

4


வடிவேலு முதலியார் தினசரி வாசகசாலைக்கு வந்து விடுவார்.அந்திமயங்கும் நேரத்தில் அந்தப்பக்கமாவந்தால் அம்மனைத் தரிசிப்பதற்கும், நாலுபேரைச் சந்திப்பதற்கும், தறிக் குழியில் உட்கார்ந்திருந்த ஆசனக் கடுப்புத் தீர்வதற்கும், மூப்பனாரிடம் சில்லறைப் பற்றுவழி செய்வதற்கும் அவருக்குவாய்ப்பிருந்தது.

அம்மன் கோயில் நடை விட்டிறங்கிய முதலியார் பட்டறையில் அமர்ந்திருந்த மூப்பனாரைப் பார்த்து "மூப்பனார்வாள், இன்னிக்குப் பேப்பரே வரலியா? ஒண்ணையும் காணமே" என்று விசாரித்தார்.

"ஆமா மதியம் வரலே. ஒருவேளை அஞ்சரை வண்டியிலே வரலாம்" என்று நிர்விசாரமாகப் பதில் சொன்னார் மூப்பனார்.

"சரி, வெத்திலைபாக்குகுடுங்க, போட்டுக்கிட்டாவது இருக்கலாம்" என்று கூறிக்கொண்டே, சாத்தி வைத்திருந்த சரப்பலகை யொன்றை எடுத்துக் கடைப்படிக்கும், தெருவிலுள்ள குத்துக் கல்லுக்குமாகப் போட்டு அதில் துண்டை மடித்துப் போட்டு உட்கார்ந்தார் முதலியார்.

வெற்றிலையையும் பாக்கையும் எடுத்துக்கொடுத்தார் மூப்பனார்.

"என்ன முதலியார் வாள், பொகையிலை வேண்டாமா?"

ஒரு காம்பு இருக்கு, அது போதும்" என்று சொல்லிவிட்டு, களிப்பாக்கைக் கடுக் என்று கடித்தார் முதலியார்.

"முதலியார்வாள், மாசமும் புறக்கப்போவுது. உங்க நிலுவையைக் கொஞ்சம் அடைச்சிட்டா நல்லது. என் பாடும் ஓடியடையணும் பாருங்க" என்று தொண்டையைச் செருமிக் கொண்டே கேட்டார் கடைக்காரர்.

"அதுக்கென்ன? நம்ம துட்டு என்ன ஓடியா போவுது? கைலாச முதலியார்வாள் கிட்டே பாக்கி வாங்கணும்.