பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

94


பட்டினிக் கொடுமையின் காரணமாகவே அவர் காலமானாரென்று ஊர் மக்கள் பேசிக் கொள்கிறார்கள். அவரது சடலத்தை ஊர் மக்கள் பண வசூல் செய்து அடக்கம் செய்தனர்.

(ந.நி.)

கைலாச முதலியாரின் பார்வையில் இந்தச் செய்தி தற்செயலாகப் பட்டிருந்தால் ஏதோ ஜாதீய அபிமானத்தால், ஒரு கணம் அனுதாபம் காட்டிவிட்டு, மறுபக்கத்தைத் திருப்பியிருப்பார். ஆனால் கொஞ்ச நாட்களாகவே அவர் இப்படிப்பட்ட செய்திகளைத்தான் பத்திரிகையில் தேடித் தேடிப் படித்து வந்தார். அன்றொரு நாள் ராசீபுரத்தைச் சேர்ந்த ஒரு நெசவாளியின் மனைவி பசிக்கொடுமை தாங்காது தன் இரண்டு குழந்தைகளைக் கிணற்றில் போட்டுத் தானும் விழுந்து இறந்ததாக அவர் செய்தி படித்தார்; மற்றொரு நாள் காஞ்சிபுரத்தில் இருபத்தைந்து வயது நெசவுத் தொழிலாளி ஒருவன் வறுமையின் காரணமாக, பட்டினி கிடந்து மாண்டதாகப் படித்தார்; இன்னொரு நாள் வேறொரு கைத்தறித் தொழிலாளி ரோட்டடிச் சாலைப் புறத்தில் ஒரு மரத்தில் தூக்கிட்டுத் தொங்கி, தற்கொலை செய்துகொண்டதை வாசித்தறிந்தார்; குழந்தைக்குப் பால் வாங்கிக் கொடுக்க முடியாத இளம் தாயொருத்தி தன் பிள்ளையை ஒன்றரை ரூபாய்க்கு விற்று விட்ட பரிதாபக் கதையையும் அவர் பத்திரிக்கையில் பார்த்தார். தேசியப் பத்திரிகைகளாலும் மூடி மறைக்க முடியாத பற்பல செய்திகளைப் படித்துப்படித்துக் கொஞ்ச நாட்களாகவே அவர் மனம் கலக்கமுற்று இருந்தது. ஏகாம்பர முதலியாரின் துயரச் செய்தியைப் படித்ததும்; கைலாச முதலியாருக்குத் தன்னையும் அறியாமல் கண்கள் கலங்கின. அதே சமயத்தில் கடந்த சில நாட்களாகவே அவரது உள்ளத்தில் அவரறியாமலேயே இனந்தெரியாது உருவாகி வந்த அந்தப் பயபீதி, தாமும் இந்த மாதிரியான துர்க்கதிக்கு ஆளாகிவிட நேருமோ என்ற அச்சம், அவரது