பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

96




அதற்குள் இன்னொருவர், "ஆமா முதலாளி வேணு மின்னா கூலியைக் கூடக் குறைச்சிக்கிடுங்க. எங்க புழைப்பைக் கெடுத்துப் பிடாதீங்க" என்று கெஞ்சிக் கேட்டுக் கொண்டார்.

கைலாச முதலியாரின் இளகிய மனம் ஒரு கணம் தர்மாவேசத்தால் அலைக்கழிந்தது. அன்று கூலி உயர் வுக்காக, வாதாடி வழக்காடிப் பேசிய அதே தொழிலாளர்கள் இன்று தங்கள் வயிற்றுக் கொடுமையினால், கூலியைக்கூடக்குறைத்துக்கொள்ள முன்வரும் கோரத்தை, அந்தக் கோரத்தின் சூட்சுமத்தை அவர் உணர்ந்து கொண்டார். அந்த உணர்ச்சி ஏற்பட்டபோது எதிரே நின்ற அந்தத் தொழிலாளிகள் ஒவ்வொருவரும், அந்த இனம் தெரியாத ஏகாம்பர முதலியாரைப்போல் காட்சியளிப் பதாகவும், அவர்கள் அனைவரும் வற்றி மெலிந்து, வாடி உலர்ந்து எலும்புக்கூடுகளாக மாறுவது போலவும், ராமன் வீழ்த்திய மராமரங்களைப் போல, அந்த எலும்புக் கூடுகள் சடசடவென்று முறிந்து விழுந்து, பிடிசாம்பலாகக்குமைந்து குவிவது போலவும், அவரது மனக்கண் முன்னால் ஒரு பிரமைக்கனவுதிரைவிரித்தது. ஆனால், அதேபிரமையைத் தொடர்ந்து, தமது மனைவி தன் அருமை மகன் ஆறுமுகத்தைக் கிணற்றில் தள்ளிக் கொலை செய்வது போலவும், தமது உயிரற்ற சடலம் விக்கிரமசிங்கபுரம் ரோட்டுப் பாதையிலுள்ள புளிய மரத்தில் தூக்கிலிட்டுத் தொங்கிக் கொண்டிருப்பது போலவும், தமது அருமை மகன் மணி வயிற்றுக்குச் சோறின்றிப் புழுவாய் வாடிச் சுருண்டு . கிடப்பது போலவும், ஒருகண்காணாத உருவெளித்தோற்ற மயக்கம் அவரது மனத்திரையில் பளிச்சிட்டு மறைந்தது.

மறு கணமே அவர் தமது இளகிய மனத்தை இறுகப் பிடித்துக்கொண்டு பதிலளித்தார்:

"உங்களுக்கு நூல் கொடுத்து என்ன பிரயோசனம்? மேலும் மேலும் எனக்குத்தானே கைப்பிடித்தம். உங்க