பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

124


பண்ணிராதே உன் சன்னிதிக்கு இவன் பேராலே மணி படிச்சிப் போடுதேன்" என்று அவள் மனத்துக்குள்ளாகவே ஆயிரம் தடவை நேர்ந்து கொண்டாள்; லோகநாயகி அம்மனுக்குச்சந்தனக்காப்புசாத்துவதாக நேர்ந்து, மஞ்சள் துணியில் கால்ரூபாய்க் காசை எடுத்து முடித்துவைத்தாள்.

விடிந்து எட்டுமணி ஆனபிறகும் ஆறுமுகம் கண் விழிக்கவில்லை.

கைலாச முதலியாரும் ஆறுமுகத்தின் நிலைமையைக் கண்டு கவலை கொண்டவராக, இன்னது செய்வதென்று தெரியாமல் டாக்டரின் வரவை எதிர்நோக்கி, கட்டிலின் மீது இடித்துவைத்த புளியாக அமர்ந்திருந்தார். காப்பி குடித்து விட்டு வருவதற்காக ஹோட்டலுக்குச் சென்றிருந்த மணி, "என்னம்மா, தம்பிக்கு எப்படியிருக்கு” என்று கேட்டுக் கொண்டே உள்ளே வந்தான்.

"எல்லாம் அப்படிதான் இருக்கு" என்று சலிப்புடன் கூறிவிட்டு, மணி, அடுப்பிலே வென்னி போட்டிருந்தேன். காஞ்சிட்டுத்தான்னு பாரு" என்று வேண்டிக் கொண்டாள் தங்கம். மணி வெந்நீரைப் பார்ப்பதற்காக அடுக்களையுள் சென்றான்.

சிறிது நேரத்தில் டாக்டர் வந்து சேர்ந்தார். "அதோ டாக்டர் வந்துட்டாரு" என்று கணவனிடம் கூறியவாறே - விலகிக் கிடந்த சேலையை இழுத்துத் தோளை - மூடிக்கொண்டு எழுந்து நின்றாள் தங்கம்மாள். உள்ளே சென்றிருந்த மணியும் வெந்நீரை எடுத்துக்கொண்டு வந்து சேர்ந்தான். "வாங்க டாக்டர். ராத்திரிப் பூராவும் கண்ணே திறக்கலை; ஒண்ணும் சாப்பிடவுமில்லை" என்று கூறிக் கொண்டே கட்டிலை விட்டு இறங்கி வந்தார், கைலாச முதலியார்.

எல்லோருடைய முகங்களும் அருள் அற்றுக் கவலை தோய்ந்திருந்தது.