பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

137


மணியின் தலையில் மடித்து வைத்துக் கட்டினார். இருளப்பக் கோனார் 'முதலாளி முதலாளி' என்று கூப்பிட்டுக் கொண்டே பூஜையறைக் கதவை இடி இடியென்று இடித்தார். பதில் இல்லை. கதவு உட்புறம் தாளிடப்பட்டு இருந்தது.

இதற்குள் இருளப்பக் கோனாரை டாக்டர் அவசர அவசரமாகக் கூப்பிட்டார். இருளப்பக் கோனார் யந்திரம் மாதிரி டாக்டரிடம் திரும்பி ஓடினார். அவரது வயோதிக உடலில் புதிய தெம்பும் பலமும் எங்கிருந்தோ வந்து குடிகொண்டுவிட்டது போலிருந்தது. எனினும் உணர்ச்சிக் கொந்தளிப்பால் அவர் உடல் படபடத்துப் பதறியது.

"பெரியவரே, மணிக்குப் பலத்த காயம். 'உடனே ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போகணும். வெளியே என் கார் நிக்குது சீக்கிரம் இவரைத் தூக்குங்கள்" என்று அவசர அவசரமாகப் பேசி முடித்தார்.

இருளப்பக் கோனார் பொங்கிவரும் அழுகையை உதட்டைக் கடித்து உள்ளடக்கிக் கொண்டு, மணியைப் பிடித்துக் தூக்கினார்; டாக்டரும் அவருக்கு ஒத்தாசையாக ஒரு புறத்தைப் பிடித்துக் கொண்டார். இருவரும் சிறிதும் காலம் தாழ்த்தாமல் மணியைத் தூக்கிக்கொண்டு மாடியை விட்டுக் கீழிறங்கி வந்தார்கள்.

அந்த அலங்கோலக் காட்சியைக் கண்டு தங்கம்மாள் "ஐயோ!" என்று அலறினாள். "டாக்டரையா, எம் புள்ளைக்கு என்னய்யா நேர்ந்துட்டுது?" என்று புலம்பினாள்.

"ஒண்ணுமில்லேம்மா" என்று சொல்லியவாறே டாக்டர் நடை இறங்கினார். இருளப்பக் கோனார் மாலை மாலையாகக் கண்ணீர் வடித்தவாறே, மணியைக் காரில் கொண்டு போய்ச் சேர்த்தார்.

"பெரியவரே, நீர் ஆகவேண்டியதைக் கவனியும்; நான் வருகிறேன்" என்று கூறியவாறே வீட்டில் தாவி