இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

9



"பாத்தியளா, இதை. சட்டசபை அங்கத்தினர்மீது லஞ்சம் வாங்கியதாகப் புகாராம். வேலியே பயிரை மேய்ந்தா, விளைச்சல் கண்டு முதல் ஆனாப்பிலேதான்! இந்தக் காங்கிரசுக்கு என்ன கேடுகாலம் வரப்போவுதோ? ஹும்! எல்லாம் அந்தக் காந்தி மகானோடேயே போச்சி!" என்று ஏதோ ஒரு தலைப்பைப் பார்த்து விட்டு அங்கலாய்த்துக் கொண்டார், வடிவேலு.

"ஆமண்ணாச்சி,அந்தவெள்ளைக்காரன்ராச்சியமே தேவலைன்னு போச்சி காந்தி பேரைச் சொல்லிக்கிட்டே, நம்மைத் தேரோடும் வீதியிலே திருவோடும் கையுமா விரட்டிடுவாங்க போலிருக்கே!" என்று விசனித்தார் இன்னொருவர்,

"வெள்ளைக்காரன் ராச்சியம் போயிட்டுதா?கல்லுக் குத்தி போல, 'நம்ம கண்ணெதிரிலேயே அங்கே மலையடியிலே ஹார்வி உக்காந்துக்கிட்டிருக்கான். என்னமோ அண்ணாச்சி, நாம மட்டும் ஏமாறலெ, நம்ம தலைவர்களுங் கூடத்தான் ஏமாந்திட்டாஹ போலிருக்கு!” என்று தமது கருத்தை வெளியிட்டார். இன்னொரு நெசவாளி:

வடிவேலு முதலியார் எதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல், பத்திரிகையில் எதையோ கூர்ந்து கவனித்தவாறே, "தம்பி, நூல்விலைகூட, இன்னம் ஏறும் போலத்தான் இருக்கு" என்றார்.

"அதுதான் நான் அப்பவே சொன்னேனே" என்று குறுக்கிட்டார் சுப்பையா.

"வே! அதுக்காக நாங்க கூலி உசத்திக் கேக்கிறதை ஒண்ணும் நிறுத்தப்போறதில்லை. வயித்துக்குத் தின்னாத் தானே வே, வேலை வெட்டி பார்க்கச் சக்தி உண்டு" என்று உடனே எதிரொலி கிளப்பினார் வடிவேலு.

பிறகு அவர் சாவதானமாகப் பத்திரிகையைப் பார்த்து விட்டு, கடைக்கார மூப்பனாரிடம் கொடுத்தார்.