பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

144


"என்ன சங்கர், நீங்கள் மணியின் வீட்டுக்குப் போய் விட்டுத் தானே வாரீங்க?” என்று சந்தேகாஸ்பதமாய்க் கேட்டார் நடராஜன்.

"ஆமாம் டாக்டர்! ஒரே நாளில் இரண்டு சாவு; மணியின் தகப்பனார், கைலாச முதலியாரும் தற்கொலை பண்ணிக்கொண்டார்; அந்தப்பையனும் போய்விட்டான். மகா பயங்கரமான சம்பவம், ஸார்!" என்று அங்கலாய்த்தான் சங்கர்,

கைலாச முதலியாரும் இறந்து விட்டார் என்ற செய்தியைக் கேள்விப்பட்டதும் டாக்டர் எதையோ யோசித்தவாறே, "தற்கொலையா?" என்று வியந்தார்; மறுகணமே,"நான் அப்படித்தான் நினைத்தேன்" என்று கூறி முடித்தார்.

சங்கரால் ஒரு கணம்கூட அமைதியோடிருக்க முடியவில்லை; அவன் நிலை கொள்ளாமல் புழுங்கிக் கொண்டிருந்தான்,

“டாக்டர் ஸார்,மணியை நான் பார்க்கமுடியுமா?"

"மன்னிக்க வேண்டும்" என்றார் டாக்டர். "சங்கர், மணியை இப்போது பார்ப்பதால் எந்தப் பயனும் இல்லை. மணிக்கு மண்டையில் நல்ல அடி; ரத்தக் காயம். ரத்த சேதத்தாலும், இருதய பலவீனத்தாலும் பிரக்ஞை இழந்துவிட்டார். இப்போதுதான் தையல் போட்டுக் கட்டிவிட்டு வந்தேன். ரத்தம் செலுத்தியிருக்கிறேன்."

இன்னது சொல்வதெனத் தெரியாமல் திகைத்துப் போனான் சங்கர்.

"நீங்கள் ஒன்றும் பயப்படத் தேவையில்லை. ஆபத்து ஒன்றுமில்லை. இருந்தாலும், அதிர்ச்சி பாருங்கள். கவனமாகத்தான் பார்க்க வேண்டும்" என்று டாக்டர் ஆறுதல் கூறினார்.