பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதலியார். தமது கதையைத் தாமே முடித்துக் கொண்டு விட்டார்.

கைலாச முதலியார் - காலமாகி மூன்று நாட்கள் ஆகிவிட்டன. |

கைலாசமுதலியாரின் அஸ்தி தாமிரபரணிநதியோடு கலந்து போய்விட்டது; தங்கம்மாளின் கழுத்தில் கிடந்த தாலி அகற்றப்பட்டு விட்டது; தர்மகர்த்தா ஸ்தானம் காலி விழுந்து விட்டது; மைனர் முதலியாரின் கனவு ஈடேறி விட்டது.

எனினும், அம்பாசமுத்திரம் வாசிகளிடையே, குறிப்பாக நெசவாளர்களிடையே, கைலாசமுதலியாரைப் பற்றிய பேச்சுத்தான் இருபத்திநாலு மணி நேரமும் நடந்து கொண்டிருந்தது. எங்கும் எப்போதும் இதைப்பற்றியே பேச்சு; ஏனெனில் எல்லோருடைய மனதிலும் அவர்களுடைய எதிர்காலத்தைப் பற்றிய ஒரு பாகத்தை எச்சரிக்கையை, பயபீதியை அந்த நிகழ்ச்சி ஏற்படுத்திவிட்டது.

அம்மன் கோயில் மண்டபத்திலும், மூப்பனார் கடை முன்பும் கூடிநின்ற நெசவாளிகள் கைலாச முதலியாருக்கு ஏற்பட்ட தூக்கத்தை பற்றித்தான் பேசிக் கொண்டிருந்தார்கள்.

"ஊரையே கலங்க வச்சுப்பிட்டாரே, மனுசன். இருந்திருந்து கைலாச முதலியார் இந்த வேலையா செய்வாரு? மனுசன்னா கஷ்டங்கள் வரது தான், போரது தான். அதுக்காக? இப்போ நாமெல்லாம் செத்தா போயிட்டோம்?"

”அட, சரிதான். இப்படி அணுவணுவா நித்த நித்திம் செத்துக் கொண்டுக்கிறதைவிட இப்படிச் செஞ்சிட்டா அலுப்பு விட்டதுன்னு போகும். நம்மவர்களே இன்னம் யார் யாருக்கு எந்த ஆறுகுளம் குடுத்து வச்சிருக்கோ? யார் கண்டா?" என்று பதிலுக்குச் சலித்துக் கொண்டார் ஒருவர்.