பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

160


கிடந்த அவர்களது ஆத்ம சக்தி ஏதோ தளையறுபட்டு விடுதலை பெற்றது போல் ஒருகணம் நிமிர்ந்து சுடர் விட்டது.

"ஆமா தம்பி, ஆமா. நீ சொல்வது சரிதான்" என்று தமது எண்ன உலகிலிருந்து இறங்கி, பிரக்ஞை பெற்ற வடிவேலு முதலியார் பெருமூச்செறிந்து கொண்டார்.

அங்கிருந்தவர்கள் முகத்தில் தெரியும் ஆர்வத்தை உணர்ந்தவனாக, சங்கர் உற்சாகத்தோடு பேசத் தொடங்கினான்:

"இந்த சர்க்கார்தான் உங்கள் கஷ்டத்துக்கெல்லாம் காரணம்; பொறுப்பாளி. கைத்தறித் துணியின் ஏற்றுமதியைத் தடை செய்து அமெரிக்க நாட்டிலிருந்து அதிக விலைக்கு பஞ்சைவாங்கி நூல்விலையைக் கொள்ளை கொள்ளையாக ஏற்றுவதற்கு வழி செய்தது இந்த சர்க்கார். அதனால்தான் கைத்தறி ஜவுளியெல்லாம் விற்காமல் தேங்கிப் போய்விட்டது. உங்களுக்கும் பிழைப்புக் கெட்டுப் போயிற்று. கஷ்டப்படுபவர்கள் நீங்கள் மட்டும் அல்ல. இந்த நாட்டிலுள்ள ஆறு லட்சம் நெசவாளிகளையும், அவர்களை நம்பிப்பிழைக்கும் லட்சோபலட்சக்கணக்கான பெண்டு பிள்ளைகளையும் கொல்லாமல் கொன்று கொண்டிருக்கிறது. இந்த அரசாங்கம் தெரிந்ததா?"

சங்கரின் உக்கிரமான பேச்சு ஆங்காங்கு நின்று கொண்டிருந்த நெசவாளிகளையும் மண்டபத்துக்கருகே கவர்ந்து இழுத்தது. நெசவாளிகள் அனைவரும் தமது நிலைமையைத் தெரிந்து கொள்வதில் ஆர்வமும், தெரிந்து கொண்டதால் உண்டாகும் கவலையும் ஏககாலத்தில் முகத்தில் பிரதிபலிக்க, சங்கரின் வாயையே பார்த்துக் கொண்டுநின்றார்கள்.

பஞ்சடைந்து ஒளியிழந்து போன கண்களோடு பரிதாபமாய்க்காட்சியளித்த ஒரு நெசவாளி,"தம்பி, இதுக்கு விமோசனமே கிடையாதா? இப்படி நித்த நித்தம் செத்துப்-