பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/167

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பிழைப்பதுதான் எங்க தலைவிதியா?" என்று கரகரத்துக் கேட்டார்.

சங்கர் மெல்ல இளநகை புரிந்து கொண்டான். "விதியை நினைத்துச் சாவை வரவேற்பது கோழைத்தனம். நீங்கள் எல்லோரும் சாகவாவிரும்புகிறீர்கள் வாழத்தானே விரும்புகிறீர்கள். அப்படியானால், நீங்கள் தான் உங்கள் விதியை மாற்ற, சாவைத் தவிர்க்க வழிசெய்ய வேண்டும்" என்றான் சங்கர்.

"எப்படியப்பா விதியை மாத்தறது? அன்னிக்கி எழுதினவன் அழுச்சி எழுதப் போறானா?" என்று அந்த முதியவர் குழந்தை போலக்கேட்டார்,

"என்ன தாத்தா, சாவித்திரி எமனோடேயே போராடி, தன் புருஷன் விதியை மாத்தலையா? இன்று உங்கள் பிழைப்புக்கு எமனாகவுள்ள ஜவுளிக் கொள்கையை நீங்களும் எதிர்த்துப் போராடினால், உங்கள் விதியும் தானே மாறிவிடும் தாத்தா?” என்றான் சங்கர்.

"நீ என்ன சொல்லுதே?" என்று ஆர்வத்தோடு ஒரு குரல் கேட்டது.

"இன்னிக்குள்ள ஜவுளித் தேக்கம் போகவும் நூல் விலை இறக்கவும் நீங்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து, சங்கம்வைத்து சர்க்காரின் போக்கைக்கண்டிக்க வேண்டும். உங்கள் கோரிக்கைகளைப் பூர்த்திசெய்யுமாறு நிர்ப்பந்திக்க வேண்டும்; உங்கள் ஒற்றுமையும், உறுதியும்தான் உங்களைக் காப்பாற்றும் மருந்து;உங்கள் விதியை மாற்றும் ஆயுதம்."

"என்னது? சங்கம் வைக்கிறதா? இந்தா பாருங்க தம்பி சின்னப்புள்ள, என்னமோ வாய்க்கு வந்ததைச் சொல்லுவான், அதை நம்பி, வம்பிலே தும்பிலே மாட்டிக்கிடக் கூடாது" என்று எடுத்த எடுப்பில் நெசவாளிகளை எச்சரிக்க முன் வந்தார் சுப்பையா முதலியார்.

சங்கர் சட்டென்று அவர் பக்கம் திரும்பினான்.