பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

163


கேட்கக் கேட்க அவனது உற்சாகமும் உவகையும் அதிகரித்தன.

"ஏன் நடக்காது? சர்க்காரிடம் அதிகார பலம், ஆயுத பலம் எல்லாம் இருப்பதால் தானே அது நம்மை ஆளுகிறது? அதனாலதானே நீங்கள் பயப்படுகிறீர்கள்? யோசித்துப்பாருங்கள். நாமில்லாமல் இந்த சர்க்கார் ஆகாயத்திலிருந்து குதித்து வந்து விட்டதா? சர்க்காரிடம் அதிகார பலம் இருக்கலாம்; உங்களிடமோ மக்கள் பலம் இருக்கிறது. மக்கள் கோடிக்கால் பூதம் போன்றவர்கள். நீங்கள் ஒன்று சேர்ந்து நிர்ப்பந்தித்தால் சர்க்கார். இணங்கித்தானாக வேண்டும். நீங்கள் ஒன்றுபடவேண்டும் என்பதற்காகத்தான் சங்கம் வையுங்கள் என்கிறேன்" என்றான் சங்கர்.

நெசவாளிகள் எல்லோரும் சங்கருக்குப் பதிலே சொல்லாமல் ஒருவரையொருவர் பார்த்தனர்: சங்கர் சொல்லுகிறபடி நடந்தால் விமோசனமுண்டா என்ற கேள்வி ஒவ்வொருவரின் மனத்திலும் தளிர்விட்டது.

"யானைக்குத் தன் பலம். தெரியாததால்தான் அது மாவுத்தனுக்குப் பயப்படுகிறது. அதுபோல் நீங்களும் பயந்து பின்னடைகிறீர்கள். ஆனால் உங்கள் ஒற்றுமையின் பலத்தை நீங்கள் உணர்ந்துவிட்டால், பிறகு சாவு உங்களுக்கல்ல. ஒன்றுபட்ட மக்களின் சக்தியை எந்த சர்க்காராலும் நசுக்க முடியாது. இது சரித்திரம் கண்ட உண்மை"! என்று ஆணித்தரமாகக் கூறி முடித்தான் சங்கர்.

அங்கிருந்தவர்கள் அனைவரும் சங்கரின் உறுதி வாய்ந்த பேச்சின் வசிய சக்தியால் கட்டுப்பட்ட நாகங்கள் போல் பேசாது உட்கார்ந்திருந்தனர். வடிவேலு முதலியார் தான் நெசவாளிகள் அனைவரையும் ஒரு முறை சுற்றிப் பார்த்துவிட்டு, ஆத்திரத்தோடு பேச முன்வந்தார்.

"என்னையாபேசாம இருக்கீங்க" அழுதபிள்ளைதான் பால் குடிக்கும் வாயுள்ள பிள்ளைதான் பிழைக்கும் சங்கம் வச்சா, கழுத்துக்கு கத்தி ஒண்ணும் வந்திராது. மதுரையிலே