பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/181

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 மணிக்கு மறந்து போன கனவு மீண்டும் திரும்புவது போல் புத்தியில் சலன அலை வீசியது.

"டாக்டர், அப்பா செத்துப்போயிட்டாங்க, டாக்டர்!

மணி கதறினான். 'அப்பா அப்பா' என்று அலறினான். அவனுக்கு மீண்டும் மயக்கம் போட்டுவிட்டது. டாக்டர் அவனைத் தாங்கிப் பிடித்துப் படுக்க வைத்தார்; நாடியைப்பரிசோதித்துப் பார்த்தார்; மயக்கம் தெளிவதற்கு ஏதோ ஒரு ஊசி போட்டு முடித்தார். ஆஸ்பத்திரி நர்சைக் கூப்பிட்டு மணியைக் கவனித்துக் கொள்ளச் சொல்லிவிட்டு சங்கரிடம் திரும்பினார்.

"சங்கர், ஒன்றும் பயமில்லை ! வாருங்கள். வெளியில் இருக்கலாம்" என்று கூறியவாறே தம் அறைக்கு நடந்தார்; சங்கரும் அவரை பின் தொடர்ந்து வந்து சேர்ந்தான்.

"என்ன சங்கர், மணிக்கு உடம்புக்கு ஒன்றுமில்லை. பயத்தின் காரணமாக ஏற்பட்ட அதிர்ச்சிதான் நீங்கவில்லை. இரண்டு நாளைக்குள் நான் அவரைத் தன்னிலைக்குக் கொண்டு வந்துவிடுகிறேன்" என்று தைரியம் கூறினார் டாக்டர்.

"இயற்கையிலேயே மணி பயந்த சுபாவம் உடையவன்; அதிலும் இந்த மாதிரியான அதிர்ச்சி அவனுக்கு இதற்குமுன் ஏற்பட்டதில்லை; ஏற்படும் சந்தர்ப்பமும் இல்லை" என்றான் சங்கர்.

"அதிர்ச்சி சொல்லிக் கொண்டா வருகிறது? எதையும் தாங்கிக் கொள்ளத் தைரியம் வேண்டும்."

"தைரியம் அனுபவத்தில்தான் வரவேண்டும் டாக்டர். வாழ்க்கையையே சொப்பனம் போல் வாழ்ந்து கொண்டிருந்தால், நனவுலகத்தில் திடீர் மோதல் அதிர்ச்சியைத் தானே உண்டுபண்ணும்" என்று ஏதோ சொல்லத்தொடங்கினான் சங்கர்..