பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/189

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

183


மணி இதயமே உடைந்துவிட்டது போல் பலத்த பெருமூச்சு விட்டான். அவனுக்குச் சோர்வு தட்டியது. சிறிது நேரத்தில் மீண்டும் அந்தக் குருவிகளின் கீச்சுக் குரல் அவனைக் கவர்ந்தது. வைக்கோல் பொறுக்குவதற்காக வெளியே சென்றிருந்த அந்த ஜோடிக் குருவிகள் திரும்பி வந்துவிட்டன,

'உலைந்து உருக்குலைந்து போன எங்கள் குடும்பத்தை இந்தக் குருவிகளைப் போல் இனிமேல் நான் தான் உருவாக்க வேண்டும் போலிருக்கிறது' என்று அவன் தனக்குத்தானே சிந்தித்துக் கொண்டான்.

'இந்தக் குருவிக் காதலியைப் போல் எனக்கும் ஒத்தாசையாக இருக்க, கமலா வந்து சேருவாளா? அவள் தந்தை அவளை எனக்குக் கட்டிக்கொடுக்கச் சம்மதிக்கவில்லை என்று அவள்தான் சொன்னாள், இப்போதோ? நான் சொத்துச் சுகமிழந்த, தற்கொலை செய்து கொண்டு இறந்து போன ஒருவரின் பிள்ளை. அப்போதே முடியாது என்றவர் இப்போது மட்டும் மாறவா போகிறார்?.விதி விட்டபடி நடக்கிறது.ஆனால், எங்கள் குடும்பத்தையே சீரழித்தவர் அவர்தானே அவர் குடும்பத்திலா சம்பந்தம்?... அதற்குக் கமலா என்ன செய்வாள்? கமலா என்னை ஒரு நாளும் மறக்க மாட்டாள். ஆனால் நான்தான் அவளை மறந்து விடுவேனோ? சேச்சே!. ஏன் இந்த அதைரியம்? ஏன் இந்த அவநம்பிக்கை ....?"

அவன் மனத்தில் மீண்டும் டாக்டர் வந்து நின்று தைரியம் காட்டுவது போல் தோன்றியது.

மாலையில் டாக்டர், சங்கர், கமலா மூவரும் வந்து சேர்ந்தார்கள், காலடிச் சப்தம் கேட்டதுமே மணி ஆர்வத்தோடு தலையை உயர்த்தி அவர்களைப் பார்த்தான், கமலாவின் வருகையைக் கண்டதும் மணியின் முகத்தில் களை தட்டியது. மெல்லிய புன்னகையுடன் அவர்களை வரவேற்றான்,