பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/190

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

184


 நடராஜன் மணியின் அருகே வந்தவுடன்", "என்ன" மணி, இப்போ எப்படியிருக்கும்?” என்று கேட்டார்.

“தேவலை ஸார். களைப்புத்தான் அதிகமாயிருக்கு" என்றான் மணி. "மணி, இனிமேல் உங்களுக்கு என் மருந்தே தேவையில்லை. அதோ உங்கள் உள்ளத்துக்குத் தெம்பளிக்கும் டானிக்!" என்று கமலாவைத் தூண்டிக் காட்டி, மணியைக் களிப்பூட்ட முயன்றார் டாக்டர்.

மணி கமலாவைக் கடைக்கண்ணால் பார்த்தான். ஆனால் கமலாவோ அவன் எதிர்பார்த்ததற்கு விரோதமாக மாலை மாலையாகக் கண்ணீர் சிந்தி நின்றாள். மணி தன்னைப் பார்ப்பதைக் கண்டவுடன் அவளுக்கு அழுகையே வந்து விட்டது, விசித்து விசித்து அழத் தொடங்கினாள். மணியின் கண்களில் ததும்பிய களிப்புக் குடியோடிக் கண்ணீர் தளும்பியது.

உடனே சங்கர் எழுந்திருந்து கமலாவிடம் சென்று "அசடே! எதுக்கு அழறே? மணிக்குத் தைரியமூட்டுவதை விட்டுவிட்டு, இப்படிக் கண்ணீர் சிந்தினால்?" என்று கண்டித்தான்.

கமலாவுக்கு அப்போதுதான் தன் தவறுபுரிந்தது. அழ வேண்டும் என்பது அவள் விருப்பமில்லை. எனினும் மணியைப் பார்த்ததும், அவனது வெளிறிய முகத்தையும், கட்டுப்போட்ட தலையையும் கண்டவுடன், அவர்கள் குடும்பத்துக்குத் தன் தந்தையால் நேர்ந்த அவலநிலை ஞாபகத்துக்கு வந்துவிட்டது.

சங்கர் கண்டித்தவுடனேயே அவள் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு மணியிடம் ஏதோ சொல்ல வாயெடுத்தாள். ஆனால், "அத்தான்!" என்று ஏங்கிக் குமுறிய ஒரே வார்த்தையோடு அவள் வாய் அடைத்துப் போய்விட்டது. மணியிடம் என்னென்னவோ பேச வேண்டும். என்றுதான் அவள் விரும்பி வந்தாள். ஆனால், அந்த நிலையில் அவளால் எதுவுமே பேச இயலவில்லை.