பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/194

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

188


'என்ன வேண்டும், ஏது வேண்டும்' என்று விசாரிப்பதோடு, இரவில் மணியுடன் துணைக்காகப் படுத்தும் வந்தார்.

மணிக்கு உடல் நிலைதான் குணமாயிற்றேயொழிய மனநிலை நாளுக்குநாள் மோசமாகிக் கொண்டு வந்தது. தனது உடல் நலத்தில் இத்தனை பேரும் காட்டிவந்த ஆர்வத்தையும் அன்பையும் கண்டு, அவன் மனம் ஒருபக்கம் திருப்தியடைந்த போதிலும், அந்தத் திருப்தியுணர்ச்சிக்கும் மிஞ்சிய வேறு பல பயவுணர்ச்சிகள் அவன் மனத்தை அலைக்கழித்தன. அவனுக்கு ஏற்பட்டிருந்த மன உளைச் சலை அவன் யாரிடமும் சொல்லி ஆற்றிக்கொள்ளவும் கூறினான். தன் மனக்குகையில் தோன்றிச் சுழித்துக் குமுறும் எண்ண அலைகளை, அவன் தனக்குள்ளாகவே உள்ளடக்கித் தவித்துக் கொண்டிருந்தான். இந்த மன உளைச்சல்தான் அவனிடம் நாளுக்குநாள் வெற்றிக் கண்டதே ஒழிய, அவன் அதை வெற்றி காணவில்லை. எனவே அவனுக்கு இரவில் சரியான தூக்கமில்லை. இரவில் விளக்குகள் எல்லாம் அணைக்கப்பட்டு ஆஸ்பத்திரியே தூங்கத் தொடங்கிய பிறகும் அவன் தூங்குவதில்லை.

இந்த மாதிரியான வேதனையால் அவனுக்கு இரவு ஏன் தான் வருகிறதோ' என்றிருந்தது.

ஆனால் நித்தம் நித்தம் இரவு வந்து கொண்டு தானிருந்தது.

அன்றிரவுமணிபத்தும் அடித்து விட்டது.

ஆஸ்பத்திரி எங்கும் அமைதி குடிகொண்டு விட்டது. எங்கோ பக்கத்து அறையில் படுத்திருந்த நோயாளி இடையிடையே 'லொக்கு லொக்கு' என்று இருமுவது மட்டும் இரவின் அமைதியைக் குளப் பாசிபோல் சில கணங்கள் சிதற விட்டது. மணி படுத்திருந்த அறைக்குள் மாட்டப்பட்டிருந்த கடிகாரம் இப்போதுதான் உயிர்பெற்று ஓடத் தொடங்கியது போல் 'டிக் டிக்' கென்று தாளலயம் தவறாது சப்தித்தவாறே இருளின் பயங்கரத்துக்குப்