பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/249

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

243


தொரு ஆரவாரம் அந்தச் சூழ்நிலையைச் சிலிர்த்து நடுக்கியது. அந்த ஆரவாரம் அவனது மயக்க நிலையை மோதித் தள்ளி, அவனை உசுப்பி உலுப்பித் தன்னுணர்வு கொள்ளச் செய்தது.

இருண்டு வரும் கண்களைத் திறந்து அவன் ஏறிட்டுப் பார்த்தான்.

எதிரே நுங்கும் நுரையாய்ப் பொங்கிப் புடைபெயர்ந்து வரும் காட்டாற்று வெள்ளம் போல், ஒரு பெரும் ஜனத்திரள் அலைமோதி விம்மி ஆரோகணித்து வந்தது கொண்டிருந்தது. அந்த மனிதப் பிரவாகத்தின் முன்னணியில் ஒருவன் விண்ணளாவிப் பறந்து படபடக்கும் ஒரு செந்நிறப் பதாகையைக் கம்பீரமாக ஏந்திப் பிடித்து ராஜ நடை போட்டு வந்தான்; அவனுக்குப் பின் அலைமேல் அலைதிரண்டு வருவது போல் மக்கள் அணியணியாய் வந்து கொண்டிருந்தார்கள்,

"ஊர்வலமா?"

விழிப்புற்று எழுந்த அவன் மனம் எண்ணியது!.

அந்த ஊர்வலத்திலிருந்து சப்த சாகரங்களும் ஏகோபித்துப் புடைத்தெழுத்து ஆரவாரிப்பது போல், பல கோஷங்கள் விண்முட்டி அளாவி முழங்கின, அந்த ஆரவாரம் வீதியின் இரு மருங்கிலுள்ள கடை கண்ணிகளில், கட்டிடங்களில் மோதித் திரும்பி எதிரொலித்தது; அங்கு நின்ற மனிதர்களின் செவித் தொளையில் மோதி அவர்களைச் சிலிர்க்கச் செய்தது. அந்த மனிதர்களின் இதயக் குகைகளில் முட்டி மோதி எதிரொலித்தது.

"நூல் விலையைக் குறை!"

"அன்னியத் துணி இறக்குமதியை அனுமதிக்காதே!

"ஜவுளிக்கொள்கையை மாற்று!"

"தேங்கியுள்ள சரக்கைக் கொள்முதல் செய்!"