பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/260

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

254


அவனுக்கு அந்த மக்களின் வாழ்க்கையை மாற்றுவதற்கு வழி கிடையாதா என்ற ஆவேசம் இருந்தது; அவர்களுக்கும் தங்கள் வாழ்வு மாறவேண்டும் என்ற தாகம் இருந்தது. எனினும் அந்த வாழ்வுக்குரிய பாதை அவனுக்கோ அவர்களுக்கோ தெரியவில்லை.

திருச்சியில் இருந்த சமயம், மணி ஒரு புதிய பிரபஞ்சத்திலேயே வாழ்ந்தது போன்ற அனுபவத்தைப் பெற்றான்; 'மதுரையிலேயே மில்லுக்கு ஆள் எடுக்கிறார்ளாம்!' என்று எவனோ சொன்னதைக் கேட்டுத்தான் அவன் மதுரைக்கு வந்து சேர்ந்தான்;ஆனால் மதுரையிலும் அவனுக்குத் திருச்சி அனுபவம் தான் காத்திருந்தது.

மதுரை வந்து ஏமாந்து, மணி பட்ட சிரமங்கள் கொஞ்சமல்ல; திருச்சி அவனுக்குப் பழகிப்போன இடமாயிருந்தது. மதுரையிலோ?....

அவன் மனம் கடந்த காலச் சிந்தனைகளை எண்ணியெண்ணி உள்ளுக்குள் குமைந்துகொண்டிருந்தது; அவன் தன் வாழ்க்கையின் பயங்கரத்தைப் பற்றிச் சிந்தித்தவாறே கண்களை மூடினான்; சிறிது நேரத்தில் தூக்கம் அவனை ஆட்கொண்டது...

காலை நேரத்து இளவெயில் தன் மீது பட்டு உறைப்பதை உணர்ந்தவுடன் மணி கண் விழித்துத் திடுக்கிட்டு எழுந்து உட்கார்ந்தான்; அவனுக்கு எதிரே ராஜு சிகரெட்டைப் புகைத்தவாறே பத்திரிகை படித்துக் கொண்டிருந்தார். மணி தூங்கி எழுந்ததைக் கண்டதும், அவர் அவன் பக்கம் திரும்பி, "நல்லாத் தூங்கினீர்கள் போலிருக்கே?" என்று சௌஜன்ய பாவத்தோடு கேட்டார்.

அதற்குள் எதிர்த்த நாயர் ஹோட்டல் பையன் இரண்டு கப் டீ கொண்டு வந்து கொடுத்தான்.

டீயை எடுத்து மணியிடம் கொடுத்தவாறே, "சாப்பிடுங்க தம்பி" என்றார் ராஜு.