இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

21


மைனர்; சுப்பையா ஆர்வத்தோடு கழுத்தை நீட்டினார்.

"இந்தா பாரு ஒண்ணும் நம்ம கையைவிட்டு மிஞ்சிப் போயிராது. இப்பவும் கைலாசத்துக்கு நம்ம தாதுலிங்க முதலியார்வாள் கிட்டேதான் லேவாதேவி. 'ஆசாமியை அந்தப் பக்கமா ஒரு இறுக்கு இறுக்கினாப் போச்சி!" என்றார் மைனர்.

"அதென்னமோ அண்ணாச்சி லேசிலே இதை விட்டுறக்கூடாது."

"உன்னைமாதிரி நாலுபேர் சொல்றாகளேன்னுதான் பார்க்க வேண்டியிருக்கு. இல்லேன்னா, இதிலே என்ன காசாபணமா? என்னமோதெய்வகாரியமேன்னுபார்த்தா, ஊர்க்காரன் சும்மா இருக்கானா?. எடுத்ததுக்கெல்லாம் பொல்லாப்பு இருந்தாலும் இந்த அருணாசலமுதலியாரை அப்படி ஒண்ணும் மடக்கிற முடியாது. ஆமா" என்று ஆணித்தரமாக அறைந்தார், மைனர் முதலியார்.

"நல்லாச் சொன்னிய, அண்ணாச்சி. பூடம் தெரியாம, சாமி ஆடுதானுக" என்று மைனரின் வஞ்சின மொழியைப் பாராட்டினார் சுப்பையா. பிறகு அவர் தமது இடத்தை விட்டு எழுந்திருந்தவாறே, "அப்ப நான் வரட்டுமா, அண்ணாச்சி?" என்று கேட்டார்.

"சரி" என்று நிர்விசாரமாகப் பதில் வந்தது. எனினும் சுப்பையா அந்த இடத்தை விட்டு நகரவில்லை. கையைப் பிசைந்து கொண்டு நின்றார்.

"என்ன சுப்பையா?" என்று அர்த்த பாவத்தோடு கேட்டார் மைனர்.

"ஒண்ணுமில்லே அண்ணாச்சி நம்ம சின்னப் பயலுக்கு உடம்புக்கு முடியலெ. டாக்டர்கிட்டெ காட்டணும். கையிலெ ஒத்தச் சல்லி இல்லெ. அஞ்சு ரூவா இருந்தாக்கிடைக்குமா?" என்றுமென்றுவிழுங்கிக் கூறினார் சுப்பையா.