பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/283

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

277


தெருவில் நின்ற மக்கள் தம்மால் இயன்ற உதவிகளைச் செய்ய முன் வந்தார்கள்.படையின் முன்னணியில் துண்டை விரித்தவாறு சென்று கொண்டிருந்த ஊழியரின் முந்தியில் செப்புக் காசுகளும் வெள்ளி நாணயங்களும் வந்து விழத் தொடங்கின.

வேலை கொடு அல்லது வெளியேறு"

"மக்கள் சர்க்கார் வேண்டும்!

நிமிர்ந்த நன்னடையோடு நேர் கொண்ட பார்வை யோடு பட்டினிப் படை வீதிகளை வலம் வந்தது. பல வீடுகளில் பெண்கள் வாசலில் கோலமிட்டு, ஊர்வலத்தை வரவேற்றார்கள், பற்பல சங்கங்கள் அவர்களுக்கு மாலை மரியாதை செய்து வரவேற்றன; ஒரு வாசகசாலை அன்பர்கள் அந்தப் பட்டாளத்தினரைத் தமது இடத்தில், நிறுத்தி, சிரம பரிகாரமாய்ப் பானகமும், மோரும் கொடுத்து உபசரித்தார்கள்; சிலர் ஊர்வலத்தினருக்குக் கடைகளிலிருந்து பலகாரங்களும் தின்பண்டங்களும் வாங்கி வழங்கினார்கள்.

ஊர்வலம் மதுரை மக்களின் அனுதாபத்தையும் ஆதரவையும் திரட்டிப் பலம் பெற்றவாறு, மதுரை நெசவாளர் சங்கத்துக்கு வந்து சேர்ந்தது; சங்க முகப்பில் சூரிய ஒளியில் கம்பீரமாகத் தலை நிமிர்ந்து நின்ற சங்கக் கொடி 'அந்த ஊர்வலத்தினரைக் கண்டதும், அதிக உற்சாகத்துடன் படபடத்து அவர்களை வரவேற்பது போல் காற்றில் ஆடியது.

பட்டினிப் பட்டாளத்தினர் அன்று நெசவாளர் சங்கத்திலே தங்கினார்கள். நெசவாளர் சங்க ஊழியர்கள் அவர்களுக்கு அன்று மதியம் வடை பாயசத்தோடு விருந்தளித்து உபசரித்தார்கள்; மணி அந்த நெசவாளர் படையினரை உபசரிப்பதிலும், அவர்களோடு பேசி அவர்கள் சிரமங்களைக் கேட்டறிவதிலும் மிகுந்த பிரயாசையும், கவனமும் எடுத்துக் கொண்டான்.