இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

23


முதல் பிளாட்பாரத்திலுள்ள இரண்டாம் வகுப்பு வெயிட்டிங் ரூமில் கமலா தன்னந்தனியாக அமர்த்து ஏதோ ஒரு புத்தகத்தைப் புரட்டிப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு அருகில் அடுக்காக இருந்த புத்தகங்கள் அவள் ஒரு மாணவி என்பதைப் பிறருக்குப் பறைசாற்றிக் கொண்டிருந்தன. பிளாட்பாரத்தில் திரிந்து கொண்டிருந்த மாணவர் திருக்கூட்டத்தில் சிலர் தங்கள் சட்டைக் காலர்களை முயல் காதுகளைப் போல் தூக்கி விட்டுக் கொண்டும், சிகரெட்டுக்களைப் புகைத்துக் கொண்டும், கலகலவென்று வெட்டிச் சிரிப்புச் சிரித்துக் கொண்டும் அவனது கவனத்தை கவரமுயன்று கொண்டிருந்தனர். வேறு சிலர் அருகிலுள்ள ரயில்வே நிலையப் புத்தகக் கடையில் போய்நின்கொண்டு, புத்தகங்களைப் புரட்டிப்பார்த்துக் கொண்டிருந்தனர். இன்னும் சிலர் அவள் ஒருத்தி இருக்கிறாள் என்ற பிரக்ஞையே அற்று தத்தம் போக்கில் சென்று கொண்டிருந்தனர்.

மாணவர்களின் வாலிபக் கண்களை அவள் கவர்ந்ததில் வியப்பொன்றும் இல்லை.உண்மையில், அவள் கண் நிறைந்த அழகியாகத்தான் இருந்தாள். கமலாவுக்கு மிஞ்சிப் போனால் இருபது வயதிருக்கலாம். மாணவிதான் என்றாலும், சோகை பற்றி வெளிறிப் பசந்து போய், கீரைத் தண்டு போல் மெலிந்து தோன்றும் இன்றையக் கல்லூரி மாணவியர் சிலரைப்போல் அவள் காட்சியளிக்கவில்லை. மேலும் நவநாகரிகம் என்ற பெயரால் முகத்தைச் சர்வ விகாரமாக்கிக் கொள்ளும் அன்னிய நாட்டு அலங்கார ஆடம்பரங்களும் அவளிடத்தில் காணப்படவில்லை. பொன்னிறமான மேனி, எடுப்பும் நிமிர்வும் கொண்ட வாளிப்பான உடற்கட்டு, கடைசல் பிடித்து மெருகு கூட்டியது போன்ற ‘மூக்கு முழி’ கச்சிதமான, கண்ணை உறுத்தாத ஆடையலங்காரம் முதலியவற்றோடு அவள் ஒரு சௌந்தர்ய விக்ரகம் போல் இருந்தாள். திறந்திருந்த கண்ணாடி ஜன்னல் வழியாக வந்து சாயும் அந்திநேரக்