பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/292

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

286


அவர் எங்கோ தேயிலைத்தோட்டத்தில் வேலை பாத்ததாகக் கேள்வி.

மணி அந்த ஊழியரை மாறிமாறிக் கேள்விகள் கேட்டு இத்தனை விவரங்களையும் கிரகித்துக் கொண்டான்.

அன்று முதல் அவனுக்கு ராஜு எப்போது வந்து சேருவார் என்ற கவலையே பெரிதாய்ப் போய்விட்டது. அன்று அவர் வரமாட்டார் என்று தெரிந்தும்கூட ஒரு வேளை தப்பித் தவறி வந்துவிட மாட்டாரா என்ற அசட்டு நம்பிக்கையோடு ரயில்வே ஸ்டேஷன் வரையிலும் அர்த்த மற்றுச் சென்று திரும்பி அங்கலாய்த்தான்.

'ராஜு என்று வருவார்?'

அவரை எதிர்பார்த்து தவித்துக் கொண்டிருந்தான் மணி.

கடைசியில் ஒருநாள் அவர் வந்து சேர்ந்தார்.

"ராஜுவைக் கண்டதும் மணிக்கு இன்னது பேசுவதென்று தெரியவில்லை. உணர்ச்சி மேலீட்டால் அவன் வாய் அடைத்துப் போய்விட்டது.

"என்ன மணி? சௌக்கியந்தானே" என்று கேட்டுக் கொண்டே ராஜு தமது பையை உள்ளே கொண்டு வந்து வைத்தார்; சட்டையைக் கழற்றி ஸ்டாண்டில் மாட்டினார். "மகா நாடு எல்லாம் சிறப்பாக இருந்ததா?" என்று கேட்டான் மணி.

"மிகச் சிறப்பாக நடந்தது!” என்றார் ராஜு.

மணி தன் தொண்டையை லேசாக இருமிச் சரிப்படுத்திக் கொண்டு, "ராஜு, நான் இப்போது உங்களைப் பிரமிக்க வைக்கப் போகிறேன்" என்று கூறிக்கொண்டே தன் பையில் வைத்திருந்த புகைப்படத்தை எடுத்து அவர் முன் நீட்டினான்.