பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/299

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

293


அரசாங்கமோ அவர்களது கோரிக்கைகளுக்கும் மனுக்களுக்கும் எந்தவிதமான மதிப்பும் கொடுக்கவில்லை; அவர்களுக்கு எவ்வித நிவாரணமோ, நிவாரணத்துக்கான உத்தரவாதமோ அளிக்க முன் வரவில்லை. எனவே, கிட்டியிட்டு நெருக்கும் வாழ்க்கைக் கஷ்டங்களைத் தாங்க முடியாமல், கடைசியாக, தங்கள் உரிமைக்காகப் போராடத் தீர்மானித்து விட்டார்கள்.

வேலை அல்லது நிவாரணம்!

நூல்கொடு அல்லது சோறுகொடு!

அவர்கள் தங்கள் கோரிக்கைகளுக்காக அரசாங்கத்தோடு அறப்போர் நடத்துவதென்று முடிவு கட்டினார்கள்; தங்கள் கோரிக்கைகளுக்குச் சர்க்கார் இணங்கிவரும் வரையிலும், அந்த நெசவாளிகள் அம்பாசமுத்திரத்திலுள்ள தாலுகா ஆபீஸ் முன்னிலையில் சத்தியாக்கிரகம் செய்வதென்று தீர்மானித்தார்கள்; வடிவேல் முதலியார் அந்தச் சத்தியாக்கிரகிகளை ஆதரித்து, தாலுகா ஆபிஸ் முன்னிலையில் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்தார்.

அம்பாசமுத்திரம் நகரெங்கிலும் போர்டுகள் தொங்கவிடப்பட்டன, எங்குபார்த்தாலும் 'வேலை அல்லது நிவாரணம்' 'நூல் கொடு அல்லது சோறு கொடு' என்று வாக்கியங்கள் காணப்படும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன, "நெசவாளர் சத்தியாக்கிரகம்'. 'வடிவேலு முதலியார் உண்ணாவிரதமிருப்பார்' என்ற செய்திகள் சில நாட்களில் மக்கள் மத்தியிலே பரவிவிட்டன. மக்கள் அனைவரும் நெசவாளர் சத்தியாக்கிரகத்தைப் பற்றிப் பேசினார்கள்; ஆதரித்தார்கள்.

தங்கள் சத்தியாக்கிரகப் போருக்கு நகர மக்களின் பரிபூரண ஆதரவையும் பெறுவதற்காகத் தான் அவர்கள் ராஜுவை வரவழைத்துச் சொற்பொழிவாற்ற ஏற்பாடு செய்திருந்தார்கள்; மறுநாள் காலையில் ராஜுவே