பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/307

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

301


கேட்டைக் கடந்து செல்லும்வரை அங்கேயே நின்று கொண்டிருந்துவிட்டு, "என்னமோ அவனும் திரும்பி வந்துவிட்டான். ஆனால், தெய்வம் இந்தப் பொண்ணைச் சோதிக்காமல் இருக்கணுமே!" என்று தனக்குத்தானே சொல்லிப் பெருமூச்சொறிந்தாள் தர்மாம்பாள். அதன்பின் அவள் வீட்டுக்குள் சென்று, தன் பிள்ளைகள் எப்போது வந்து சேருமோ என்ற கவலையோடு படுக்கையில் படுத்து விழித்துக் கொண்டிருந்தாள்.

சிறிது நேரத்தில் திடீரென்று வாசற்புறத்தில் தாதுலிங்க முதலியாரின் பியூக் கார் பயங்கரமாக உறுமிவிட்டு நிற்கும் சப்தம் கேட்டுத் திடுக்கிட்டு எழுந்தாள், தர்மாம்பாள். அவள் எதிர்பார்த்துப் பயந்தது போலவே, காரின் கதவைக் கோபத்துடன் படாரென்று அறைந்து சாத்திவிட்டு உள்ளே வந்தார் தாதுலிங்க முதலியார்.

அவர் வந்ததும் வராததுமாய்ப் படபடப்புடனும் கோபாவேசத்துடனும் தமது அங்கவஸ்திரத்தை எடுத்து ஒரு நாற்காலி மீது விட்டெறிந்தார். ஓரிடத்திலும் நிலை கொள்ளாமல் மேலும் கீழும் பரபரவென்று நடந்தார்.

உள்ளேயிருந்தவாறே கணவனின் படபடப்பை உணர்ந்தறிந்து கொண்டாள் தர்மாம்மாள். ஒரு வேளை மணி வந்த விஷயம் தன் கணவருக்குத் தெரிந்திருக்குமோ? தெரிந்தாலும் தான் ஏன் இந்தப் படபடப்பு? சங்கரும் கமலாவும் அங்கு போனது தெரிந்திருக்குமோ?. இருக்காது. தெரிந்திருந்தால்? என்னமோ தெரியலியே! அவள் மனம் என்னென்னவோ எண்ணி அலைக்கழிந்தது. கடைசியில் அவள் தன் கணவனின் கோபத்துக்கு முன் நிற்கப் பயந்தவளாகவும், அதன் காரணத்தை அறிந்து கொள்ளத் துடித்தவளாகவும், மெதுவாக வெளியே வந்து எட்டிப் பார்த்தாள், -

கண்களில் ஆக்ரோஷமும் கோபமும் பொத்துக் கொப்புளிக்க, கைகளை இறுகப் பிசைந்தவாறு மேலும்