பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/319

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

313


"சரித்திரம் உங்களுக்குத் தானே பாடம் கற்றுக் கொடுக்கும். உங்களுக்கு மட்டுமல்ல, உங்களை அடிதாங்கி நின்று ஆதரித்துப் போற்றுகிறதே சர்க்கார், அதற்கும் கூடப் பாடம் கற்பிக்கும்!"

"துரோகி!"

"நானா துரோகி? சமூகத் துரோகியான நீங்கள் தியாகிகள் நிற்கும் இந்த நிலத்தில் நிற்கக்கூட யோக்கியதையற்றவர்கள். மரியாதையாகப் போய் விடுங்கள்!"

"போகாவிட்டால்." என்று சவால் விடுத்தார் தாதுலிங்க முதலியார்.

"பெற்றெடுத்த தந்தை என்ற பாவத்துக்காக வாயால் சொல்கிறேன். போய்விடுங்கள் போகிறீர்களா, இல்லையா?"

சங்கர் பொறுமையை இழந்து தன் தந்தையைத் தாக்கி விடுவானோ என்று சூழ நின்ற நெசவாளிகள் பயந்தார்கள். தாதுலிங்க முதலியார் அங்கு நிலவிய சூழ்நிலையில் இனிமேல் தாம் எதுவும் செய்ய முடியாது என்று உணர்ந்தவராக, அடிபட்ட பாம்பைப் போல் சீறிக் குமைந்து கொண்டு திரும்பிச் சென்றார்.

"டேய்! உன்னைப் பார்த்துக் கொள்கிறேன்!" என்ற கடூரமான குரல் காரினருகே கிடுகிடுத்து ஒலித்தது; அந்த ஒலிக்கு எதிரோலி கிளம்புவதுபோல், அந்த பியூக் காரும் திடீரென்று உறுமிக் குமைந்து விட்டு, அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது.

தாதுலிங்க முதலியார் சென்று மறைந்ததும், அங்கு நிலவிய பயங்கர அமைதி குலையவில்லை. நெசவாளிகள் அனைவரும் சங்கருக்கும் அவருக்கும் நடந்த வாக்கு