இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

59


இதிலே கொடுக்கிறதும், வாங்கறதும் எங்க இஷ்டம். இல்லேன்னா, அந்தத் தர்மப்பிரபு கைலாசம் இருக்காரே, அவரைப் போய்ப் பாருங்க. கர்ணன் போகையிலே அவரைத்தான் கையைக் காட்டிட்டுப் போனானாம். போங்க, போங்க."

வடிவேலு முதலியாரும் மற்ற நெசவாளிகளும் இன்னது செய்வதென்று தெரியாமல் சில வினாடிகளுக்கு ஒருவர் முகத்தை, ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். பிறகு அவர்கள் அனைவரும் ஒன்றுமே பேசாமல் நடை இறங்கி வெளியே வந்தார்கள்.

வெளிக் கிராதி கேட்டைத் தாண்டுவதற்குள்ளாகவே வடிவேலு முதலியார் அத்தனை நேரமும் கட்டுப்பட்டுக்கிடந்த தம் வாயைத் திறந்தார்.

ஊரிலே பெரிய முதலாளி ஆச்சேன்னு நான் வாயை மூடிக்கிட்டுக் கிடந்தேன். இல்லேன்னா, என் வாயிலே வந்ததுக்கு நல்லாக் கேட்டிருப்பேன்" என்று தமக்குத் தாமே சொல்லி, சமாதானம் தேட முயன்றார்.

"ஆமாம் தம்பி, ஊரிலே உள்ளவனுக்கின்னா ஒரு வழக்கு; இல்லாதவனுக்கின்னா இன்னொரு வழக்கு, தெரிஞ்சதுதானே?” என்ற அனுபவ சித்தாந்தம் பேசினார், ஒரு வயதான நெசவாளி.

அவர்கள் கேட்டைத் தாண்டி வெளிவந்ததுமே, எல்லோரும் தத்தம் வாயைத் திறந்து தமது ஆத்திரத்தைத் தணித்துக் கொண்டனர்.

"இவங்க தினம் தினம் பாலும் பழமும் அல்வாவும் நெய்யுமாத் தின்னு செழிக்கிறதில்லே குத்தமில்லெ. என்னமோ நம்ம ஒருநாள் ஆசைப்பாட்டுக்கு காப்பிக் கடைக்கோ சினிமாவுக்கோ போறதுனாலேதான் ஓட்டையாப் போச்சாம். காசைக் கரியாக்குதோமாம்!" என்றார் ஒருவர்.