இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70


என்னும் அதிநீரிழிவு வியாதியும் ஊர்ஜிதப்படுத்தியது. எனவேதான் 'ஸுகரே' கூடாது என்ற டாக்டரின் உத்தரவைக் கூறிக் கொள்வதில் அவர் உள்ளூரப் பெருமைப்பட்டுக் கொண்டார்,

வாசல் நடையில் நின்ற தங்கம்மாள் இந்த ரகசியங்களையெல்லாம் அறியாதவளாய், "வாசல் தேடி வந்துட்டிய தொண்டையை நனைக்காமல் போறதாவது? பால் சுடவச்சிக் கொண்டாறேன்"

என்று கூறியவாறு பதிலை எதிர்பாராமலே உள்ளே சென்றாள்,

"அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்" என்றார் முதலாளி

"அப்படிச் சொல்லப்படுமா? இது உங்க வீடு; உங்க சொத்து" என்றார் கைலாச முதலியார்.

தாதுலிங்க முதலியார் சில விநாடிகள் ஒன்றும் பேசாதிருந்தார். பிறகு கைலாச முதலியாரைப் பார்த்து, "உங்கள்ட்டெ ஒருவிசயமாப் பேசணும்னுவந்தேன்" என்று கூறியவாறே கணக்கப்பிள்ளையைப் பார்த்தார்.

குறிப்பறிந்த கைலாச முதலியார் கணக்கப்பிள்ளை நோக்கி, கணக்கப்புள்ளே, கொஞ்சம் வெளியே போயிட்டு வாரும்" என்றார். கணக்கப்பிள்ளையும் பலகையை விட்டு எழுந்து வெளியே சென்றார்.

தாதுலிங்க முதலியார் தொண்டையை லேசாகக் கனைத்துக் கொண்டார்.

"உங்கள்ட்ட அந்தப் பழைய பாக்கி விசயமா ஒரு வார்த்தை சொல்லிட்டு போலாம்னுதான் வந்தேன் மாசமும் தான் என்ன ஆச்சு?"

"அதுக்கென்ன? என். பணம் ஓடியா போவுது?" என்பார் கைலாச முதலியார்.