இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

83


வற்றி மெலிந்து வாடத் தொடங்கின. நிலத்தை நம்பிப் பிழைப்பு நடத்திவந்த விவசாயிகளின் நிலைமை படுமோசமாயிற்று. பஞ்சம் தலை விரித்தது, கிராமம் கிராமமாக அடுப்புப் புகையே காணாமல் வானம் வெளிறிட்டு நிர்மலமாய்க் கிடந்தது. வயிற்றுக்கு உணவற்ற விவசாயப் பெருங்குடி மக்கள் பன்றிகளைப் போல் நிலத்தைத் தோண்டி, அங்குக் கிடைத்த வறண்ட வேர்களையும் கிழங்குகளையும் தின்று வயிற்றைக் கழுவினார்கள்; கற்றாழைக் கிழங்கைத் தின்றார்கள்; இனம்பேர் தெரியாத காய்கனி புல் பூண்டுகளைத் தின்றார்கள்; கழிச்சலெடுத்துச் செத்தார்கள். பலர் பிழைப்புக்கு வழி தேடி அயலூர் சென்றார்கள். 'மதுரைப் பக்கத்தில் பாலம் கட்டுகிறார்களாம்,' 'திருநெல்வேலியில் ரோடு போடு கிறார்களாம்' என்றெல்லாம் மக்கள் இன்று பேசுவார்கள்; நாளைப் பயணம் கட்டி விடுவார்கள். ஏதோ ஒரு பயங்கர ராகூஸன் அண்டம் குலுங்க வந்து அந்தக் கிராமத்தையே சூறையாடி, நாசமாக்கிவிட்டுச் சென்றது போல், சிவகிரியின் விவசாய வட்டாரங்கள் அருளிழந்து, அலங்கோலமான, அவலமான நிலையில் இருந்தன. இருளப்பக் கோனாரின் குடும்பமும் இந்த நிலைமைக்கு விதிவிலக்கல்ல.

இந்த அழகில் ஜமீனின் வரி வசூல் கெடுபிடி வேறு. ‘வெள்ளாமை இல்லை; எனவே இந்த வருஷம் வரிவஜா வேண்டும்' என்று குடியானவர்கள் ஜமீன்தாரிடம் முறையிட்டு கொண்டார்கள், சர்க்காருக்கு மனுச் செய்து கொண்டார்கள். பிழைப்புக்கு வழி காட்டும் முறையில் உள்ளூர்க் கண்மாயை ரிப்பேர் செய்யுமாறு, தூது சென்று தெரிவித்தார்கள் குடியானவர்கள் கேட்பதையெல்லாம் நிறைவேற்றி வைத்தால், அப்புறம் சர்க்காரின் அந்தஸ்தின் கதி என்ன ஆவது? எனவே சர்க்காரும் மௌனம் சாதித்துவிட்டது. விவசாயிகள் கொடுமைக்குப் பயந்து இரவோடு இரவாய்க் குடி பெயர்ந்தார்கள்: பண்ட பாத்திரங்களை, ஆடு மாடுகளை, கோழி, குஞ்சுகளைப் பறிகொடுத்தார்கள். ஆண்டவனை நோக்கி அழுது தீர்ப்பதைத் தவிர வேறு விமோசன மார்க்கம் தெரியாமல் வாடி வதங்கினார்கள்.