இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

86


நோக்கி ஏதோ வாய்த்துடுக்காகக் கேட்டு விட்டான். அவ்வளவுதான். சிறுவன் என்றும் பாராமல், அந்தக் கங்காணி அவனை மரத்தோடு மரமாய்க் கட்டிவைத்து, சாட்டையைக் கொண்டு ரத்த விளாறாக விளாசித் தள்ளி விட்டான். இந்தக் கண்ணறாவிக் காட்சியைக் காண முடியாமல், தடுக்க முடியாமல், இருளப்பக் கோனாரும் மாரியும் தொண்டை வறள, அழுது கூச்சலிட்டதுதான் மிச்சம். இருளப்பக் கோனாருக்கு இருந்த மனப் பக்குவம் வீரையாவுக்கு இல்லா விட்டாலும், அவரிடமில்லாத ரோஷமும் மானமும் வீரையாவிடம் நிறைய இருந்தன. எனவே அவன் தன் பெற்றோரின் கண்களிலேயே விழிப்பதற்குக் கூசியவனாய், அன்றிரவே சொல்லாமல் கொள்ளாமல் ஓடிப்போய் விட்டான். 'எங்கே போனான், என்ன ஆனான்', 'இருக்கிறானா, போய் விட்டானா' என்பதே இருளப்பக் கோனாருக்கும் மாரிக்கும் தெரியவில்லை...

மகனை இழந்த கவலையோடு இருளப்பக்கோனாரும் மாரியும் தேயிலைத் தோட்டத்தில் வேலை பார்த்து வந்தார்கள். இருளப்பக் கோனார் மலைமேலுள்ள தாதுலிங்க முதலியாரின் பங்களாவில் வேலைபார்த்து வந்தார். அப்போதுதான் ஒரு நாள் கைலாச முதலியாரும் தாதுலிங்க முதலியாரும் அங்கு வந்தார்கள். கைலாச முதவியாருக்குத் தமது செல்வாக்கையும் செல்வத்தையும் அறிமுகப்படுத்தி வைப்பதற்காக, தாதுலிங்க முதலியார் அவரை அழைத்து வந்திருந்தார். அந்தச் சமயத்தில்தான் இருளப்பக் கோனார் கைலாச முதலியாரின் நல்ல குணத்தையும் இரக்க சிந்தையையும் உணர்ந்து, அவரிடம் தமது கதையையெல்லாம் சொன்னார். இருளப்பக் கோனாரின் பரிதாபகரமான கதையைக் கேட்டுக் கண் கலங்கிய கைலாச முதலியார், அவருக்குத் தாம் ஆதரவளிப்பதாக வாக்குறுதியளித்து, அம்பாசமுத்திரத்துக்கு வந்து சேருமாறு கூறினார்.

மறுமாசமே இருளப்பக் கோனாரும் மாரியும் அம்பாசமுத்திரம் வந்து சேர்ந்தார்கள். கைலாச முதலியார்