இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

87


இருளப்பக் கோனாருக்கு ஒரு வண்டிமாடு வைத்துக் கொடுத்துப் பிழைப்புக்கு வழி பண்ணிக் கொடுத்தார்; அத்துடன் ஊர்ப்புறத்திலிருந்த காலி மனையை விலைக்கு வாங்கி, குடியிருக்க ஒரு குடிசையும் போட்டுக் கொடுத்தார்; இருளப்பக் கோனாரும் விசுவாசத்தோடு கைலாச முதலியாரிடம் நடந்து வந்தார்; கைலாச முதலியாரின் வயல்களை மேற்பார்த்துக் கொண்டார்; வீட்டு வேலைகளைக் கவனித்துக் கொண்டார்; அவ்வப்போது பாரம் ஏற்றிச்சென்று, அதில் கிடைக்கும் வருவாயின் மூலம் தமது வீட்டுப்பாட்டைக் கழித்து வந்தார். மாரியம்மாவும் வாரா வாரம் சேகரித்து வைத்திருக்கும் சாணத்தையெல்லாம் தட்டி எடுத்து எருவாக்கி, வீதிகளில் சென்று விற்று வருவாள்; இருந்தாலும், அவளுக்கு மகனைப் பிரிந்த ஏக்கம் மட்டும் பத்து ஆண்டுகள் ஆகியும் இன்னும் குறையவில்லை. கைலாச முதலியாரின் மகன் மணியைப் பார்க்கும்போதெல்லாம், "என் புள்ளை உசிரோடு தப்பிப் பிழைச்சிக் கிடந்தா, தம்பி உசரத்துக்கு வளர்ந்திருப்பான்" என்று பைத்தியம் போல் தனக்குத் தானே சொல்லிக்கொள்வாள். இதைக் கேட்கும் கைலாச முதலியாரும், "மாரி, கவலைப்படாதே. உன் பிள்ளையை எப்படியானாலும் கண்டு பிடித்து உன்னிடம் கொண்டு வந்து சேர்த்துவிடுகிறேன் "என்று ஆறுதல் கூறத்தவறுவதில்லை.

உரலிலுள்ள வெற்றிலை பதமிழந்து கூழாவதையும் உணராமல் தம்மை மறந்தவராக இடித்துக் கொண்டேயிருந்தார் இருளப்பக் கோனார். உதடுகள் துடிதுடிக்க, பழைய நினைவுகளில் தோய்ந்து மீண்ட உணர்ச்சிப் பரவசத்தோடு, "வீரையா, வீரையா" என்று அவரது வாய் மட்டும் கரகரத்து முனகிக் கொண்டது.

உள்ளே சென்ற மாரி மட்டும் புகையிலைக் காம்பைத் தேடிப் பிடித்துக் கொண்டு வந்து சேர்ந்தாள்.

"இந்தாங்க, போயிலை" என்று சொல்லிக் கொண்டே அவரிடம் புகையிலையை நீட்டினாள்.