இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

90




"இந்தாபாரு,மாரி; தெய்வத்தைப் பழிக்காதே"என்று அமைதியோடு உபதேசம் செய்தார் கோனார்.

அந்த உபதேசத்தை மாரி காதில் வாங்கிக் கொண்டதாகத் தெரியவில்லை. அவளிடமிருந்து எவ்விதப் பதிலும் வரவில்லை . அதற்குப் பதிலாக, அவள் விம்மி விம்மிப் பொருமுவதையும் அந்தப் பொருமலால் அவளது மெலிந்த உடல் குலுங்கிக் குமைவதையும்தான் இருளப்பக் கோனார் இருளினூடே கண்டுணர்ந்தார். உடனே அவர் தமது நடுங்கும் கரத்தால், அவளது தலையைப் பரிவோடு தடவிக் கொடுத்தவாறு, "ஏன் அழுவுதே? அழுது என்ன ஆகப் போவுது? எந்திரி, எந்திரிச்சு எனக்குச் சோத்தை எடுத்து வய்யி. வாய் கொப்பளிக்கக் கொஞ்சம் தண்ணிகொண்டா" என்று கூறி, அவள் சிந்தனையைத் திசை மாற்றித் திருப்பிவிட முனைந்தார்.

மாரியம்மாள் ஒன்றும் பேசாமல் இடத்தைவிட்டு எழுந்திருந்து, முன்தானையால் மூக்கையும் கண்ணையும் துடைத்துக் கொண்டு குடிசைக்குள் சென்றாள்.

அவர்களது சோகப் பெருமூச்சில் பங்கு பெறுவது போல், அந்த இருளின் அந்தகாரத்தில் எங்கோ ஒரு அக்காக் குருவி ஏங்கி ஏங்கி இடைவிடாது கூவிக்கொண்டிருந்தது.

10

"ஏன் இந்தப் பொருளாதாரமந்தம்?"

கைலாச முதலியாரின் மனத்தை இந்தக் கேள்வி புழுப் போல் குடைந்து அரித்துத் தின்று கொண்டிருந்தது. நித்த நித்தம் இந்தக் கேள்வி பூதாகாரமாக விம்மி வளர்ந்து விசுவரூபம் பெற்று, அவரது இதயத்தை ஒரு பேய்க் கனவைப்போல் அழுத்திக் கொண்டிருந்தது. அந்தக் கேள்வியின் பாரச் சுமையை இறக்கி வைக்கக் கூடிய