பக்கம்:பஞ்ச தந்திரக் கதைகள்.pdf/122

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

120

பஞ்ச தந்திரக் கதைகள்


அடுத்து அது தன் சூழ்ச்சி வேலையைத் தொடங்கியது.

முதல் நாள் கோட்டான்கள் அடித்துக் கொன்று போட்டிருந்த காக்கைகள் ஆலமரத்தினடியில் சிறகு ஒடிந்து போய் இரத்தம் வழிந்து அலங்கோலமாகக் கிடந்தன. அந்தப் பிணக் கூட்டத்தின் இடையிலே போய் மறைவாகக் கிடந்து இரக்கந் தரத்தக்க முறையில், துன்பமும் வருத்தமும் நிறைந்த குரலில் முக்கி முனகிக் கொண்டிருந்தது சிரஞ்சீவி.

கோட்டான் அரசன் காதில் இந்தக் குரல் விழுந்தது. 'காகம் ஏதோ கிடந்து கதறுகிறது. போய்ப் பார்’ என்று ஒரு தூதனிடம் கூறியது. அந்தக் கோட்டான் துரதன், பிணக் குவியலிடையே தேடிக் கதறிக் கொண்டிருந்த சிரஞ்சீவியைத் தூக்கிக் கொண்டு போய்க் கோட்டான் அரசன் முன்னே விட்டது.

'நீ யார்?’ என்று கோட்டான் அரசன் கேட்டது.

சிரஞ்சீவி தந்திரமாய்ப் பேசியது.

'என் பெயர் சிரஞ்சீவி. காக அரசனாகிய மேக வண்ணனுடைய தலைமுறையில் வந்தவன் நான், நான் அவனுடைய அமைச்சனாக இருந்தேன். நான் சொன்னபடி அவன் நடந்து வந்தான். நலமாக இருந்தான். நல்லறிவு சொல்பவர்களின் சொற்படி நடப்பவர்களுக்குத் தீமை வருவதுண்டா? ஆனால், பிறகு தீய அமைச்சர்கள் அரசனுக்கு வாய்த்தார்கள். அதன் பிறகு அவன் என் பேச்சைக் கேட்பதில்லை.