பக்கம்:பஞ்ச தந்திரக் கதைகள்.pdf/138

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

136

பஞ்ச தந்திரக் கதைகள்

‘உலகம் எங்கும் நிலவொளி பாய்ச்சும் திங்கள் அரசருடைய தூதன் நான். எங்கள் அரசருடைய கட்டளையை உன்னிடம் கூற வந்தேன்!” என்று கம்பீரமான குரலில் அந்த வெள்ளை முயல் கூறியது.

'திங்கள் அரசன் தனக்குத் தூது விடுப்ப தென்றால் ஏதோ தீமையான செய்தியாகத் தான் இருக்க வேண்டும்’ என்று பயந்து அந்த யானை அரசு, ‘நிலாவின் தூதனே, நீ வந்ததென்ன?’ என்று கேட்டது.

யானையின் நடுக்கத்தைக் கண்டவுடன், வெள்ளை முயலுக்கு வீறாப்பும் ஊக்கமும் மிகுதியாயின.

எங்கள் நிலாவரசரும் அவருடைய தேவிமார்களும் நீராடுவதற்தென்று இந்தக் கானகத்தில் ஓர் அருமையான சுனையை ஏற்படுத்தினோம். இரவு முழுவதும் அவர்கள் இந்தச் சுனையில் நீராடிக் களிப்பார்கள். பகலில் யாரும் இதில் இறங்காதபடி பார்த்துக் கொள்ள எங்களைக் காவல் வைத்திருக்கிறார்.

'தேவர்களானாலும் இந்தச் சுனையில் இறங்கக் கூடாதென்பது எங்கள் அரசர் ஆணை. ஆனால், இப்பொழுது, நீ உன் கூட்டத்தாருடன், இந்தச் சுனை நீரையருந்துவதற்கு வந்திருக்கிறாய் என்று தெரிந்து, நீ போய் அவனைத் தடு’ என்று கூறி என்னை அனுப்பி வைத்துள்ளார்.