பக்கம்:பஞ்ச தந்திரக் கதைகள்.pdf/174

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

172

பஞ்ச தந்திரக் கதைகள்

உயர்ந்தவர்களின் மதிப்பை அறிந்து கொள்வார்கள். ஆனால் இந்தப் பெண்களின் மனத்தைப் புரிந்து கொள்வதற்கு வழியே இல்லை. உயிருக் குயிரான இந்தக் குரங்கு நண்பனைக் கொல்ல நான் முடிவு செய்தேன். இது என் மனைவி செய்த வஞ்சகமா? இல்லை இடையில் வந்த இந்தத் தூதி செய்த கபடமா? ஒன்றும் புரியவில்லையே" என்று பேசாமல் இருந்தது முதலை. அதன் குழப்ப நிலையைக் கண்ட குரங்கு, “நண்பா, இன்றெல்லாம் உன் முகம் மிக வாடி இருக்கிறதே என்ன காரணம்? உன் மனைவி மிகவும் ஆபத்தான நிலையில் இருக்கிறாளா? எதையும் ஒளிக்காமல் சொல்’’ என்று கேட்டது.

"நண்பா, நான் என்ன சொல்வேன்! என் மனைவியோ சாகும் நிலையில் இருக்கிறாளாம். வானரத்தின் ஈரல் கொடுத்தால்தான் அவள் பிழைப்பாளென்று மருத்துவர்கள் சொல்லுகிறார்களாம். அதற்கு நான் எங்கே போவேன்?'என்று சொல்லி முதலைக் கண்ணிர் வடித்தது முதலை.

முதலையின் மன நோக்கத்தைக் குரங்கு புரிந்து கொண்டது. "பூ! இதற்குத்தானா இவ்வளவு கவலைப்படுகிறாய்? வானர ஈரல் எத்தனை வேண்டும்? நூறு வேண்டுமா?" என்று கேட்டது.

"அவ்வளவு வேண்டாம். ஒன்று இருந்தால் போதும்" என்றது முதலை.