பக்கம்:பஞ்ச தந்திரக் கதைகள்.pdf/200

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

198

பஞ்ச தந்திரக் கதைகள்

அங்கே அவன் பிள்ளை சிரித்துக் கொண்டு கிடந்தது. அதன் எதிரில் தூரத்தில் கரும்பாம்பு இரண்டு துண்டாகக் கிடந்தது. அப்போதுதான் உண்மையாக என்ன நடந்ததென்று அவனுக்குப் புரிந்தது. ஆராயாமல் அருமையாக வளர்த்த அந்த நல்ல கீரிப் பிள்ளையை வீணாகக் கொன்று விட்டோமே என்று வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டான பைத்தியக்காரன் போல் தன் தலையில் மண்ணை வாரிப்போட்டுக் கொண்டான். பெற்ற பிள்ளையைக் காட்டிலும் அதிகமாக உன்னைப் பேணி வளர்த்தேனே! வாசலில் எதிரே வந்து நின்று என்னையே எமனாகத் தேடிக் கொண்டாயே’ என்று அந்தக் கீரிப் பிள்ளையின் மேல் விழுந்து விழுந்து தரையில் முட்டி மோதிக் கொண்டு அழுதான். நீராடப் போன அவன் மனைவி திரும்பி வந்து, கீரிப் பிள்ளை இறந்து கிடப்பதைக் கண்டு ஓவெனக் கூவியழுதாள். நடந்ததைக் கேட்ட பிறகு நெருப்பிலிட்ட மெழுகுபோல் அவள் உள்ளம் உருகி நின்றாள். தீர விசாரியாமல் செயல் புரிந்தோர் அடைந்த துன்பங்களையெல்லாம் கதை கதையாய்ச் சொல்லி அவள் அழுதாள்.

அவர்கள் கடைசியில் கீரிப் பிள்ளையைக் கொன்ற பாவத்திற்குக் கழுவாய் செய்து ஓரளவு துன்பம் நீங்கியிருந்தார்கள்.