பக்கம்:பஞ்ச தந்திரக் கதைகள்.pdf/208

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

206

பஞ்ச தந்திரக் கதைகள்

வந்து விடாதோ? அதற்காகத் தான் புத்தி மேன் மேலும் வளர வேண்டுமே என்று போதனை சொன்னேன்’ என்று வேதியன் கூறினான்.

பரண் மேல் இதைக் கேட்டு கொண்டிருந்த மகன் அப்போதுதான் தன் தவற்றை யுணர்ந்தான். உடனெ பரணிலிருந்து குதித்துத் தந்தையின் காலடியில் விழுந்து வணங்கினான்.

தான் அவரைக் கொல்ல நினைத்திருந்ததைக் கூறி, ‘அப்பா, நான் இந்தப் பாவம் தீர என்ன செய்ய வேண்டும்? கட்டளையிடுங்கள்’ என்று கசிந்துருகிக் கேட்டான்.

'மகனே, உன் மாமனார். வீட்டில் போய் சில நாட்கள் இருந்தால் இந்தப் பாவம் தீரும், போ' என்றான் வேதியன்.

உடனே வேதியர் மகன் தன் மாமனார் வீட்டுக்குப் புறப்பட்டான். மாமனார் வீடு வந்து சேர்ந்த பொழுது அங்குள்ள வேதியர்கள், 'எங்கள் மாப்பிள்ளை வந்தான்! மாப்பிள்ளை வந்தான்!' என்று சொல்லிக் கொண்டு அவனை வரவேற்றுப் பலமாக உபசரித்தார்கள். பாகு,பால்,பருப்பு, நெய், தேன், பாயசம் என்று பலவகையான பொருள்கள் படைத்து உவகை ஏற்படும்படி வேதியர் மகனுக்கு விருந்து படைத்தார்கள். அவனும் நன்றாகச் சாப்பிட்டுக் கொண்டு ஆனந்தமாக இருந்தான்.