பக்கம்:பஞ்ச தந்திரக் கதைகள்.pdf/226

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

224

பஞ்ச தந்திரக் கதைகள்

'அப்படியானால், நான் உனக்கு நல்ல உணவு கொண்டுவருகிறேன்’ என்று சொல்லி விடை பெற்றுக் கொண்டது குரங்கு.

பேய் தந்த மாலையைக் கழுத்தில் அணிந்து கொண்டு குரங்கு, அரசனிடம் சென்றது. அந்த மாலையின் அழகைக் கண்டு வியந்த அந்த மன்னன், 'வானரனே, இந்த அழகு பொருந்திய மாணிக்க மாலையை எங்கிருந்து பெற்றாய்?’ என்று கேட்டான்.

‘அரசே, பக்கத்தில் ஓர் அழகான காடு இருக்கிறது. அங்கே ஒரு குளம் இருக்கிறது. காலை நேரத்தில் முதலில் குளத்தில் இறங்குவோர்க்கெல்லாம் இது போன்ற மாணிக்க மாலை கிடைக்கும்’ என்று கிழக் குரங்கு கூறிற்று.

'அப்படியானால் நானும் அங்குச் சென்று ஒளி வீசும் மாணிக்க மாலைகள் பெறுவேன்' என்று அரசன் தன் சேனைகள் புடைசூழப் புறப்பட்டான்.

குரங்கு அவனைக் கூட்டிக்கொண்டு குளக் கரைக்கு வந்தது. அப்போது அது 'அரசனே, முதலில் உன் சேனைகள் எல்லாம் குளத்தில் இறங்கித் தங்கள் தங்களுக்கு அகப்படும் மாலைகளை எடுத்துக்கொண்டு வரட்டும், கடைசியில் நாம் இருவரும் இறங்கி நமக்குரிய மாலைகளை எடுத்துக் கொள்வோம்’ என்றது.

'அப்படியே ஆகட்டும்!’ என்று அரசன் தன் சேனைகளைக் குளத்தில் குதிக்கச் சொன்னான்.